ரயில் பாதையில் விதிமுறை மீறல் - ரயில்வே பாதுகாப்பு படையினர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை

கொரோனோ நோய் தொற்று காரணமாக நாடு முழுவதும் பொது முடக்கம் அமலில் உள்ளது. இதன் காரணமாக ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில் ரயில்வே வழித்தடத்தில் மாலை நேரங்களில் சில வாலிபர்கள் மது அருந்துவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி மது அருந்திவிட்டு பாட்டில்களை அங்கேயே வீசுகின்றனர். மேலும், தண்டவாளத்தில் ஜல்லிக் கற்களை வைத்து விட்டு சென்றுவிடுகின்றனர்.

இதுகுறித்து, ரயில்வே நிர்வாகம் பலமுறை கண்டித்தும், அவர்கள் கண்டு கொள்ளவில்லை. இந்நிலையில், சேலம் ரயில்வே கோட்டம், எஸ்.பி., மகேஸ்வரன் உத்தரவின் பேரில், ராசிபுரம் - மல்லூர் ரயில்வே வழித்தட பகுதியில் உள்ள பொதுமக்களை அழைத்து, காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதுகுறித்து, ரயில்வே காவல்துறையினர் கூறியதாவது: ஊரடங்கு காரணமாக இப்பாதையில் பயணிகள் ரயில் வருவதில்லை. இருப்பினும் சரக்கு ரயில் இயக்கப்படுகிறது. இதனால், வாலிபர்கள் தண்டவாளத்திலேயே குடித்துவிட்டு பாட்டில்கள், கற்களை போட்டு செல்கின்றனர். விளையாட்டிற்காக தண்டவாளத்தில் ஜல்லிக் கற்களை வைத்து விடுகின்றனர். இது அசம்பாவிதம் ஏற்பட வழிவகுக்கும். எனவே ஜல்லி கற்களை தண்டவாளத்தில் வைக்க கூடாது என்று பொதுமக்களிடம் விளக்கமாக கூறப்பட்டது. தொடர்ந்து, இவ்வாறு நடந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே துறையினர் எச்சரித்துள்ளதாகவும் அவர்கள் கூறினர்.