தாம்பரத்திலிருந்து மயிலாடுதுறை, திருவாரூர், காரைக்குடி, நெல்லை வழியாக செங்கோட்டைக்கு வாரத்தில் மூன்று நாட்கள் ரயில் சேவை - மக்களவை உறுப்பினர் தகவல்


திருவாரூர் - பட்டுக்கோட்டை - காரைக்குடி தடத்தில் ரயில் சேவை தொடங்கப்பட்ட பிறகு, கேட் கீப்பர்கள் நியமிக்கப்படாததால், ரயில்கள் குறைந்த தூரத்திற்கு கூடுதல் நேரம் எடுத்து கொள்கிறது.. அத்துடன், வேறு கூடுதல் ரயில்களும் இயக்கப்படாததாலும், பயணிகள் பெரிதும் ஏமாற்றமடைந்தனர்.

எனவே, ரயிலின் பயண நேரம் குறித்தும், சென்னையிலிருந்து திருவாரூர் - பட்டுக்கோட்டை - காரைக்குடி வழியாக போதுமான ரயில் சேவைகள் இல்லாதது குறித்தும் ரயில்வே துறைக்கு கோரிக்கைகள் அனுப்பப்பட்டு வந்தன. அத்துடன், மக்களவை உறுப்பினர்கள், பொதுநல அமைப்புகள் வாயிலாகவும் வலியுறுத்தப்பட்டு வந்தன.

இந்த கோரிக்கைகளை ஏற்ற தெற்கு ரயில்வே, ரயில்வே வாரியத்துக்கு தாம்பரத்திலிருந்து மயிலாடுதுறை, திருவாரூர், பட்டுக்கோட்டை வழியாக செங்கோட்டைக்கு ரயில் இயக்க கருத்துரு அனுப்பியிருந்தது.

இதைத்தொடர்ந்து வாரத்துக்கு மூன்று நாட்களாக இயக்குவதற்கு அனுமதி தந்துள்ளது.

இதன்படி, ஞாயிறு, செவ்வாய், வியாழக்கிழமைகளில் மாலை 6 மணிக்கு புறப்பட்டு செங்கோட்டைக்கும் மறு மார்க்கத்தில் திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் செங்கோட்டையிலிருந்து 7.35 மணிக்கும் புறப்படும். அதிவிரைவு ரயிலாக தாம்பரத்திலிருந்து இயக்கப்படும் இந்த ரயில் விழுப்புரம், மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, காரைக்குடி, விருதுநகர், திருநெல்வேலி,தென்காசி ஆகிய ஊர்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் சிவகங்கை மக்களவை உறுப்பினர் தாம்பரம் 🔄 செங்கோட்டை இடையே விழுப்புரம், மயிலாடுதுறை, திருவாரூர், பட்டுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி வழியாக வாரத்தில் மூன்று நாட்கள் ரயில் சேவை விரைவில் துவங்கவுள்ளதாக தெற்கு ரயில்வே பொது மேலாளர் தனக்கு கடிதம் மூலம் தெரிவித்ததாக அறிக்கை ஒன்றை வெளியுட்டுள்ளார்.

அதில் புதிய ரயில் சேவை விரைவில் துவங்கவுள்ளதாகவும், அதற்கான பணிகள் விரைந்து நடைபெற்று வருவதாகவும் தெற்கு ரயில்வே பொது மேலாளர் தனக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த ரயில் சேவை பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்தி ப சிதம்பரம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
புதியது பழையவை