ரயில்வே தனியார் மயத்தை எதிர்த்து தஞ்சை ரயில் நிலையம் முன்பு இன்று கண்டன முழக்கம்
Posted by Mannai Manoharan on Wednesday, 15 July 2020

கொரோனோ பொது முடக்க காலத்தை பயன்படுத்தி ரயில்வே துறை, ராணுவத் தளவாடம், நிலக்கரி, மின்சாரம், வங்கி, இன்சூரன்ஸ், தொலைத்தொடர்பு என்று அத்தனை பொதுத்துறை நிறுவனங்களும் தனியாருக்கு அளிக்கப்படுவதைக் கண்டித்து நாடு முழுவதும் சி.ஐ.டி.யு. சார்பில் இன்று (ஜூலை 16) போராட்டம் நடைபெற்று வருகிறது.

தமிழகத்திலும் சென்னை, தஞ்சை உள்ளிட்ட சில ரயில் நிலையங்கள் முன்பு சி.ஐ.டி.யு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இதில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முன்பு வடசென்னை மாவட்டச் செயலாளர் சி.திருவேட்டை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது, குறைந்த செலவில் ஏழைகள் பயணிக்கும் 224 ரயில்களைத் தனியாருக்கு வழங்கக் கூடாது. தனியார் ரயில் புறப்படும் ஒரு மணிநேரம் முன்னும் பின்னும் அரசு ரயில் இயங்காது என்று தனியாருக்கு அரசு உறுதியளித்துள்ளது ஏழை மக்களை ரயிலில் பயணிக்கவிடாமல் செய்யும். முதியோர், மாற்றுத் திறனாளி, மாணவர், சிறுவியாபாரிகள் சலுகைகள் பறிப்பு; சமூகநீதி மற்றும் வேலைவாய்ப்பு பறிப்பு ஆகிய முழக்கங்களை முன்வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

மேலும் ஆபத்துக் காலத்தில் மக்களைக் காப்பது அரசு தான், தனியார் கிடையாது. மேலும் தனியார் வருகையால் சமூக நீதி, வேலை வாய்ப்பு உள்ளிட்டவை கேள்விக்குள்ளாகின்றன. பல்வேறு தரப்பினருக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகள் ஏற்கனவே பறிக்கப்பட்டுவிட்டன. அரசு மக்களுக்கானது. மக்களுக்கான சேவைகளைத் தனியார் மயமாக்கக் கூடாது என்று அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்து பதாகைகளுடன் தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.