முதல் முறையாக இந்திய ரயில்வே சிறப்பு பார்சல் ரயிலை பங்களாதேஷுக்கு இயக்குகிறதுஇந்திய ரயில்வே, ஆந்திர மாநிலத்தின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள ரெட்டிபாலமில் இருந்து உலர் மிளகாயுடன் நாட்டின் எல்லையைத் தாண்டி சிறப்பு பார்சல் ரயிலை பங்களாதேஷின் பெனாபோலுக்கு இயக்கியது.


ஆந்திர மாநிலத்தின் குண்டூர் மற்றும் அதன் சுற்றுப்புறங்கள் மிளகாய் சாகுபடிக்கு நன்கு பெயர் பெற்றவையாகும். இந்தப் பண்ணை உற்பத்தியின் தரம் சுவை மற்றும் பிராண்டில் அதன் தனித்துவத்திற்காக சர்வதேச அளவில் போற்றப்படுகிறது. முன்னதாக, குண்டூர் பகுதியைச் சுற்றியுள்ள விவசாயிகளும், வணிகர்களும் உலர் மிளகாயை சாலை வழியாக பங்களாதேஷுக்கு சிறிய அளவில் கொண்டு சென்று வருகின்றனர், அதற்கு ஒரு டன்னுக்கு  7000 ரூபாய் வரை செலவாகும். தேசிய முடக்கக் காலத்தில், இந்த அத்தியாவசியப் பொருளை அவர்களால் சாலை வழியாகக் கொண்டு செல்ல முடியவில்லை. பின்னர் ரயில்வே ஊழியர்களும், அதிகாரிகளும் சரக்குகளை ஏற்றி செல்லும் குழுவினரை அணுகி ரயில் மூலம் அனுப்புவது குறித்த போக்குவரத்து வசதிகளை விளக்கினர். அதன்படி, அவர்கள் உலர்ந்த மிளகாயை மொத்தமாக சரக்கு ரயில்கள் மூலமாக அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் சரக்கு ரயில்கள் மூலமாக சரக்குகளைக் கொண்டு செல்வதற்கு, விவசாயிகள் மற்றும் வணிகர்கள் மொத்தமாக சரக்குகளைத் திரட்டுவது கட்டாயமாகும், அதாவது ஒவ்வொரு பயணத்திற்கும் குறைந்தது 1500 டன்களுக்கு மேல் திரட்ட வேண்டும்.

இந்த சிக்கலைத் தணிப்பதற்கும், ரயில் பயனர்கள் தங்கள் சரக்குகளை குறைந்த அளவில் கொண்டு செல்வதற்கும், அதாவது ஒவ்வொரு முறையும் அதிகபட்சம் 500 டன் வரை, கொண்டு செல்வதற்கு ஏதுவாக தென் மத்திய ரயில்வேயின் குண்டூர் பிரிவு சில பூர்வாங்க முயற்சிகளை மேற்கொண்டு சிறப்பு பார்சல் எக்ஸ்பிரஸை பங்களாதேஷுக்கு இயக்கியது. இந்த சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்குப்படுவதன் மூலம் குண்டூரின் விவசாயிகளும் வணிகர்களும் உலர் மிளகாயை சிறிய அளவில் கொண்டு சென்று தங்கள் பண்ணை விளைபொருள்களை நாட்டின் எல்லைக்கு அப்பாலும் சந்தைப்படுத்த உதவியுள்ளது.
அதன்படி, 16 பார்சல் வேன்களைக் கொண்ட ஒரு சிறப்புப் பார்சல் எக்ஸ்பிரஸ் ரயில் பங்களாதேஷின் பெனாபோலுக்கு சென்றது. ஒவ்வொரு பார்சல் வேனிலும் 466 உலர் மிளகாய்ப் பைகள் ஏற்றப்பட்டன, அவை சுமார் 19.9 டன் எடை கொண்டவை என்பதால், சிறப்பு பார்சல் எக்ஸ்பிரஸ் சுமந்த மொத்த எடை 384 டன் ஆகும். ஸ்பெஷல் பார்சல் எக்ஸ்பிரஸ் மூலம் எடுத்துச் செல்ல ஒரு டன்னுக்கு  4,608 ரூபாய் செலவாகிறது. இது ஒரு டன்னுக்கு 7,000 ரூபாய் என்ற.சாலை போக்குவரத்துடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவானதும், சிக்கனமானதுமாகும்.

கோவிட் காலத்தில் பார்சல் ரயில் போக்குவரத்தை அதிகரிக்க இந்திய ரயில்வே தொடர்ச்சியான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ளலாம். அத்தியாவசியப் பொருள்களான மருத்துவப் பொருள்கள், மருத்துவ உபகரணங்கள், உணவு போன்றவற்றை சிறிய பார்சல் அளவுகளில் கொண்டு செல்வது வணிகத்திற்கும், நுகர்வு நோக்கங்களுக்கும் தேவைப்படும் மிக முக்கியமானதாகும். முக்கியமான இந்தத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, இ-காமர்ஸ் நிறுவனங்கள் மற்றும் மாநில அரசுகள் உள்ளிட்ட பிற வாடிக்கையாளர்களால் விரைவான வெகுஜனப் போக்குவரத்துக்கு ரயில்வே பார்சல் வேன்களை இந்திய ரயில்வே வழங்கியுள்ளது. அத்தியாவசியப் பொருள்களைத் தடையின்றி வழங்குவதை உறுதி செய்வதற்காக, தேர்ந்தெடுக்கப்பட்ட பாதைகளில் ரயில்வே நேர அட்டவணையில் பார்சல் சிறப்பு ரயில்களை இந்திய ரயில்வே இயக்கி வருகிறது.

மொத்தம் 4434 பார்சல் ரயில்கள் 22.03.2020 முதல் 11.07.2020 வரை இயக்கப்பட்டன, அவற்றில் 4,304 ரயில்கள் நேர அட்டவணைப்படுத்தப்பட்ட ரயில்கள் ஆகும்.