சென்னை ஐ.சி.எப் தொழிற்சாலையில் மீண்டும் அதிவேக ரயில் பெட்டிகள் தயாரிக்க ரயில்வே வாரியம் உத்தரவு

சென்னையில் உள்ள, ஐ.சி.எப்., நிறுவனத்தில், உலக தரத்தில், நவீன ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

'ரயில் 18' திட்டத்தில், வந்தே பாரத் அதிவேக ரயிலுக்கு, ஐ.சி.எப்.,பில், 2018 - 2019ம் நிதி ஆண்டில், நவீன தொழில்நுட்பத்தில் பெட்டிகள் தயாரித்து வழங்கப்பட்டுள்ளன. மேலும் 2019 - 2020ம் நிதி ஆண்டில், 4,200 பெட்டிகள் தயாரித்து, ஐ.சி.எப். தொழிற்சாலை சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில் அதிவேக ரயிலுக்கான பெட்டிகளை, சென்னை ஐ.சி.எப். தொழிற்சாலையில் தொடர்ந்து தயாரிக்க, ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஒரு ரயிலுக்கு, 18 பெட்டிகள் வீதம், 44 ரயில்களுக்கான, 792 அதிவேக ரயில் பெட்டிகள், ஐ.சி.எப். தொழிற்சாலையில் தயாரிக்கப்பட உள்ளன.

முன்னதாக கடந்த, 2018 -- 2019ல், ரயில் -18 திட்டத்தில், 160 கி.மீ., வேகத்தில் இயங்கக் கூடிய, வந்தே பாரத் ரயிலுக்கு, முதல் கட்டமாக, இரண்டு ரயில்களுக்கான, 36 பெட்டிகள் தயாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த இரண்டு ரயில்களும், புதுடில்லியில் இருந்து வாரணாசி மற்றும் ஜம்மு - காஷ்மீர், ஸ்ரீமாதா வைஷ்ணவ தேவி கத்ரா இடையே இயக்கப்பட்டு வருகின்றன.