ராமேஸ்வரம் கடல் பகுதியில் புதிய ரயில் பாலம் பணி மீண்டும் துவக்கம்

புகைப்படம் நன்றி - பினான்சியல் எக்ஸ்பிரஸ்

ராமேஸ்வரம் - பாம்பன் கடல் பகுதியில் புதிதாக அமைக்கப்படவுள்ள ரயில் பாலம் சுமார் இரண்டரை கிலோ மீட்டர் நீளத்தில் 99 தூண்களுடன் அமைக்கப்பட உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 3 மீட்டர் உயரத்திற்கும், கப்பல் செல்லும் போது திறந்து மூட வசதியாக, 63 மீட்டர் நீளத்திற்கு தூக்குபாலம் அமைக்கப்படவுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், நேற்று மீண்டும் பணிகள் துவங்கியுள்ளன.

ராமேஸ்வரம் பாம்பன் கடல்பகுதியில் புதிய ரயில் பாலம் அமைக்க 250 கோடி ரூபாயை ஒதுக்கி, கடந்த ஆண்டு மார்ச் ஒன்றாம் தேதி பிரதமர் மோடி தலைமையில் அடிக்கல் நாட்டப்பட்டது. சுமார் இரண்டரை கிலோ மீட்டர் தூரத்திற்கு 60 அடிக்கு ஒரு தூண் என மொத்தம் 99 தூண்களுடன் இந்த பாலம் அமைக்கப்படுகிறது.

இந்தத் தூண்களுக்கு இடையே 60 அடி நீளம் கொண்ட 101 இணைப்பு கர்டர்கள் பொறுத்தப்பட உள்ளன. தற்போது உள்ள தூக்குப் பாலத்திற்குப் பதிலாக நவீன வசதிகளுடன் கூடிய ஹைட்ராலிக் வகையிலான தூக்குப் பாலமும் இதில் அமைகிறது. சுமார் 27 மீட்டர் உயரம் கொண்ட 63 மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட உள்ள இந்தத் தூக்குப் பாலத்தின் வழியாக பெரிய மீன்பிடிப் படகுகள், கப்பல்கள் ஆகியன செல்ல முடியும். இந்தத் தூக்குப் பாலம் மின்சாரம், ஜெனரேட்டர் மற்றும் மனிதர்களாலும் திறக்கும் வகையில் உருவாக்கப்பட உள்ளது.

தற்போது பாலம் அமைக்க ராட்சத இயந்திரங்கள் மூலமாக கடலுக்குள் துளையிடும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் புதிய பாலத்தின் பணிகளில் 200 முதல் 600 தொழிலாளர்கள் ஈடுபடுகின்றனர். இந்த பாலம் கட்டுமானப்பணி இரண்டு ஆண்டுகளில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.