புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக இயக்கப்பட்ட ஷ்ராமிக் சிறப்பு ரயில் மூலம் கடந்த ஜூலை 9ஆம் தேதி வரை ரயில்வேத்துறை 429.90 கோடி ரூபாய் வருவாய் : 2,400 கோடி ரூபாய் செலவு

நாடு முழுவதும் பரவி வரும் கொரொனா வைரஸ் தொற்று காரணமாக அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு உள்நாட்டு வெளிநாட்டுப் போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் வெளிமாநிலங்களில் வேலைசெய்து வந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்து வந்தனர். 

இதனை அடுத்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப ஏதுவாக மத்திய அரசு ஷராமிக் சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. 

இந்நிலையில் கடந்த 9 ஆம் தேதிவரை இயக்கப்பட்ட இந்த ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் மூலம் 429.90 கோடி ரூபாய் வருவாய் ரயில்வேத்துறை வருவாய் ஈட்டியுள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இந்தியன் ரயில்வே மே 1 முதல் ஜூலை 9 வரை 4,496 சிறப்பு ரயில்களை இயக்கியது, இந்த ரயில்களில் இதுவரை 60 லட்சம் பேர் பயணித்துள்ளனர்.

இது தொடர்பாக ரயில்வே அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், நாடு முழுவதும் மே 1 ஆம் தேதி முதல் இயக்கப்பட்ட ஷ்ராமிக் சிறப்பு ரயில்களுக்கு 2,400 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் 429.90 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

இதில் அதிகபட்சமாக குஜராத்தில் 210 கோடியும், மகாரஷ்டிராவில், 85 கோடியும் , தமிழகத்தில் 34 கோடி ரூபாயும் வருவாய் ஈட்டப்பட்டதாக தெரிவித்துள்ளார். 

இதனிடையே ஷராமிக் சிறப்பு ரயில்களில் பயணித்த ஒரு நபரின் சராசரி கட்டணம் 600 ரூபாய். ஆனால் ரயிலை இயக்க ஒருவருக்கு சுமார் 3400 ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.