ரயில் பயணசீட்டுகளை ரத்து செய்ய எதுவாக சேலம் ரயில்வே கோட்டத்தில் மேலும் 7 இடங்களில் நாளை(ஜூலை 17) முதல் முன்பதிவு மையங்கள் செயல்படும்.

கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் 21ம் தேதி முதல் நாட்டில் பொது முடக்கம் அமலில் உள்ளது. இதன் காரணமாக பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் மார்ச் 22ம் தேதி முதல் ஆகஸ்ட் 12ம் தேதி வரை ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கு பயண  கட்டணத்தை பெற எதுவாக மேலும் 7 இடங்களில் முன்பதிவு மையங்கள் நாளை(ஜூலை 17) முதல் செயல்படும் என சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதன்படி மொரப்பூர், பொம்மிடி, சங்கரி துர்கம், ஆத்தூர், நாமக்கல், கொடுமுடி மற்றும் குளித்தலை ஆகிய 7 ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்கள் காலை 8மணி முதல் மாலை 5மணி வரை செயல்படும்.

ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8மணி முதல் பிற்பகல் 2மணி வரை செயல்படும். இருப்பினும் ஜூலை மாதத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் ஜூலை மாதத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முன்பதிவு மையங்கள் செயல்படாது.

ஏற்கனவே சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட ஊட்டி, குன்னூர், மேட்டுப்பாளையம், கோயம்புத்தூர், கோயம்புத்தூர் வடக்கு, போத்தனுர், திருப்பூர், ஈரோடு, சேலம், சேலம் டவுன், திருப்பத்தூர் மற்றும் கரூர் ஆகிய 12 ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்களில் ரயில் பயணசீட்டுகளை ரத்து செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.