பயணிகள் குறைவாக உள்ள 6000 ரயில் நிலையங்களில் ரயில்கள் நிற்காது : தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்டனம்

புகைப்படம் நன்றி - தினகரன்

கிராமப்புறங்களில், சின்னச் சின்ன ரயில் நிலையங்களில் எல்லாம் இனி ரயில்கள் நிற்காது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது 50 நபர்களுக்கு குறைவான பயணிகள் உபயோகிக்கும் ரயில் நிறுத்தங்களை குறிப்பிட்ட ரயில்களுக்கு நீக்க ரயில்வேத்துறை முடிவு செய்துள்ளது. இதன் உள்ளர்த்தம் அந்த ரயில் நிலையங்களை எல்லாம் மூடிவிடுவதே.

பயணிகள் வருகை குறைந்தால், வருவாய் குறையும் என ரயில்வேத்துறை எண்ணுகிறது.

ஒரு ரயில் நிலையத்தில் ரயில் நின்றால், குறைந்தபட்சம் 50 பேர் ஏற-இறங்க வேண்டுமாம். இதை அளவுகோலாக வைத்து புதிய கால அட்டவணை அதாவது ‘பூஜ்ஜிய அடிப்படையிலான கால அட்டவணை’ தயாரிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார் ரயில்வே வாரியத்தின் தலைவர் வி.கே.யாதவ். அதன்படியே குறைவான பயணிகள் ஏறும்-இறங்கும் வருவாய் குறைவான 6,000 ரயில் நிலையங்கள் அடையாளம் காணப்பட்டு அவற்றைக் குறைக்கத் திட்டமிடப்பட்டதாம்.

இந்நிலையில் இந்த செயல் தேசத்திற்கும் அதன் பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கு எதிரானது என்றும். இதை வன்மையாகக் கண்டிப்பதுடன், மக்களுக்கு எதிரானவற்றை உடனடியாகத் திரும்பப்பெறவும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இதற்கிடையே நாடு முழுவதும் தனியார் ரயில்களை இயக்க மும்பை, டெல்லி, சண்டிகார், சென்னை, செகத்திராபாத், ஜெய்பூர், பெங்களூர் உட்பட 14 தொகுப்புகளாக பிரிக்கப்படுகின்றன.

நமது சென்னை மண்டலத்தில் 24 தனியார் ரயில்கள் இயக்கப்படும். அவை சென்னை – மதுரை, சென்னை – மங்களூர், சென்னை – கோயம்புத்தூர், திருச்சி – சென்னை, கன்னியாகுமரி – சென்னை, சென்னை – புதுடெல்லி, சென்னை – புதுச்சேரி உள்ளிட்ட வழிதடங்களில் இயக்கப்படவுள்ளது.