சென்னை எல்லைக்குட்பட்ட அனைத்து ரயில்வே முன்பதிவு மையங்கள் ஜூலை 5-ஆம் தேதி வரை செயல்படாது

பொது முடக்கம் காரணமாக, ரத்து செய்யப்பட்ட ரயில்களின் பயணச் சீட்டுக்கான பணத்தைத் திரும்பப் பெற தெற்கு ரயில்வே நிா்வாகம் ஏற்பாடு செய்தது. இதன்படி, சென்னை, சேலம், திருச்சி, திருவனந்தபுரம், பாலக்காடு, மதுரை ஆகிய ரயில்வே கோட்டங்களில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களின் முன்பதிவு மையங்கள் செயல்படத் தொடங்கின.

இதற்கிடையில், கரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்ததை தொடா்ந்து, சென்னை முழுவதிலும் , செங்கல்பட்டு,

காஞ்சிபுரம், திருவள்ளூா் ஆகிய மூன்று மாவட்டங்களில் சில பகுதிகளிலும் முழு பொது முடக்கம் ஜூன் 19-ஆம் தேதி முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்தப் பகுதிகளில் உள்ள ரயில்வே முன்பதிவு மையங்கள் ஜூன் 19-ஆம் தேதி முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை மூடப்பட்டன.

இந்நிலையில், முழு பொது முடக்கம் ஜூலை 5-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை எல்லைக்குட்பட்ட அனைத்து ரயில்வே முன்பதிவு மையங்கள் ஜூலை 5-ஆம் தேதி வரை செயல்படாது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவா் கூறியது: சென்னை முழுவதிலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூா் ஆகிய மூன்று மாவட்டங்களில் சில பகுதிகளிலும் ஜூலை 5-ஆம் தேதி வரை ரயில்வே முன்பதிவு மையங்கள் செயல்படாது. எனவே, பயணிகள், ரத்து செய்யப்பட்ட ரயில்களின் பயணச்சீட்டுக்கான பணத்தை ஜூலை 5-ஆம் தேதிக்கு பிறகோ அல்லது உள்ளூா் நிலைமையை பொருத்து அறிவிக்கப்படும் போதோ முழு பணத்தை திரும்பப் பெற முடியும். மேலும், பயண தேதியில் இருந்து 6 மாதங்கள் வரை பணத்தை திரும்பப் பெற முடியும் என்றாா்.