44 அதிவேக ரயில்களுக்கான மின் உபகரணங்கள் அமைக்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது

ரயில் பெட்டித் தயாரிப்பில் உலகப் புகழ்பெற்ற இணைப்புப் பெட்டி தொழிற்சாலை (ஐ.சி.எஃப்) சென்னை பெரம்பூரில் அமைந்துள்ளது.

இங்கு தயாரிக்கப்படும் ரயில் பெட்டிகள் இந்திய ரயில் போக்குவரத்துக்கு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

கடந்த 2018-19-ஆம் ஆண்டில் ஐ.சி.எஃப்.பில் ரயில்-18 திட்டத்தில் ‘வந்தே பாரத்’ அதிகவேக ரயிலுக்கு நவீன தொழில்நுட்பத்தில் உலகத் தரத்தில் பெட்டிகள் தயாரித்து வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஐ.சி.எஃப்.பில், மீண்டும் ‘வந்தே பாரத்’ அதிவேக ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட உள்ளன. 44 ரயில்களுக்கான 704 பெட்டிகள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளன.

இந்த ரயில் பெட்டிகள் தயாரிப்பிலும் பெரும்பாலும் உள்நாட்டுப் பொருள்களை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஒரு ரயிலில் 16 பெட்டிகள் இருக்கும். இதில் எட்டு பெட்டிகளில் மின் உபகரணங்கள் அமைக்கப்பட உள்ளன. மின் உபகரணங்கள் அமைத்தல், இயக்க சக்தி உருவாக்குதல் முக்கிய பணி ஆகும். இதன் திட்ட மதிப்பீடு ரூ.1,500 கோடி ஆகும்.

இந்தப் பெட்டிகளில் மின் உபகரணங்களை அமைப்பதை 18 மாதத்துக்குள் நிறைவு செய்ய வேண்டும். ஒரு ‘வந்தே பாரத்’ ரயில் தயாரிக்க ரூ.100 கோடி செலவாகும். இந்த ரயில்களை தயாரிக்க தேவையான நிதியை ரயில்வே வாரியம் வழங்கும்.

உள்நாடு, வெளிநாடுகளைச் சோ்ந்த பல நிறுவனங்கள் ஒப்பந்தப் புள்ளி கோரி இருந்தன. ஒப்பந்தப்புள்ளி ஜூலை 10-ஆம் தேதி திறக்கப்பட்டது. இதில், சீனா-இந்திய கூட்டு நிறுவனமும், 5 உள்நாட்டு நிறுவனங்களும் தங்களின் ஒப்பந்தப்புள்ளி விவரத்தைத் தெரிவித்துள்ளன.