தேசிய ரயில் மற்றும் போக்குவரத்து நிறுவனத்தின் 2020-21 கல்வி ஆண்டுக்கான சேர்க்கை அறிவிப்பு

ரயில்வே அமைச்சகத்தால் வதோதராவில் அமைக்கப்பட்டுள்ள  நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்திலான தேசிய ரயில் மற்றும் போக்குவரத்து நிறுவனம் என்ஆர்டிஐ, 2020-21-ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை அறிவித்துள்ளது. இந்தியப் போக்குவரத்துத் துறையில் மாற்றம் மற்றும் வளர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், நாட்டின் முன்னணிப் பல்கலைக் கழகங்களில் ஒன்றாகத் திகழவேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வரும் இந்த நிறுவனம், மூன்றாவது ஆண்டாக மாணவர்களைச் சேர்க்கவுள்ளது. இதுவரை இந்த நிறுவனம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளது.

என்ஆர்டிஐ, ஏற்கனவே உள்ள பிஎஸ்சி - போக்குவரத்து தொழில்நுட்பம், பிபிஏ - போக்குவரத்து மேலாண்மை படிப்புகளுக்கும் , புதிதாக சேர்க்கப்பட்டுள்ள இரண்டு பி.டெக் மற்றும் இரண்டு எம்பிஏ, நான்கு எம்எஸ்சி வகுப்புகளுக்கும் மாணவர்களைச் சேர்க்கவுள்ளது. இந்தப் படிப்புகள் அனைத்தும் இந்த நிறுவனத்தில் மட்டுமே பிரத்யேகமாகக் கற்பிக்கப்படும் தனித்துவமானவையாகும். பிரிட்டனின் பர்மிங்காம் பல்கலைக் கழகத்தின் ஒருங்கிணைப்புடன், ரயில்வே சிஸ்டம் பொறியில் துறை படிப்பும் இம்முறை புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது.  இந்தப் படிப்பு மேற்கொள்ளும் மாணவர்கள் ஓராண்டை பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் படிக்க வேண்டும்.

பிபிஏ, பிஎஸ்சி மற்றும் முதுநிலைப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசி நாளாகும். இந்தப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் பல மையங்களில் ஆகஸ்ட் 23-ஆம் தேதி நடைபெறும்.

பி.டெக் சேர்க்கை ஜிஇஇ மெயின் தேர்வின் மதிப்பெண்கள் அடிப்படையில் இருக்கும். இதற்காக விண்ணப்பிக்க 2020 செப்டம்பர் 14 கடைசி நாள்.

www.nrti.edu.in என்ற வலைதளத்தில் மாணவர்கள் கூடுதல் விவரங்களைப் பெறலாம். ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

கட்டண விவரம் , நிதி உதவி உள்ளிட்டவற்றுக்கு என்ஆர்டிஐ வலைதளத்தை அணுகவும்.