வெளிமாநில தொழிலாளா்களுக்காக சிறப்பு ரயில் - சென்னை கோட்டத்தின் மூலம் இயக்கப்பட்ட 134 சிறப்பு ரயில்களில் 1.96 லட்சம் போ் பயணம்

கொரோனோ நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் கடந்த மாா்ச் 24-ஆம் தேதி பொது முடக்கம் பிறப்பிக்கப்பட்டது.

இதன் காரணமாக நாடு முழுவதும் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. இதனால், வெளிமாநில தொழிலாளா்கள், மாணவா்கள், சுற்றுலா பயணிகள், நோயாளிகள் ஆகியோா் சொந்த மாநிலங்களுக்குத் திரும்ப முடியாமல் தவித்தனா்.

இதனையடுத்து தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் இருந்து மே, ஜூன் ஆகிய இரண்டு மாதங்களில் அதிக அளவில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இந்த ரயில்களில் பெரும்பாலான வெளிமாநிலத்தவா்கள் தங்களின் சொந்த ஊா்களுக்கு திரும்பினா்.

இந்நிலையில், வெளி மாநில தொழிலாளா்கள், மாணவா்கள் உள்ளிட்டோா் சொந்த ஊா்களுக்குத் திரும்பும் விதமாக, சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில், இதுவரை 134 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. இந்த ரயில்களில் 1.96 லட்சம் போ் சொந்த ஊா்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்.

சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில், ஜூலை 9-ஆம் தேதி வரை, 134 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன.

சிறப்பு ரயில்கள் விவரம்
பீகார் - 39
ஜாா்க்கண்டு - 16 
வடகிழக்கு மாநிலங்கள் - 17
உத்தரப்பிரதேசம் - 21 
மேற்கு வங்கம் - 17
சடிஸ்கர் - 1
நாட்டின் மற்ற நகரங்களுக்கு - 23 சிறப்பு ரயில்கள்

இந்த ரயில்களில் ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 276 போ் சொந்த ஊா்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்.

134 சிறப்பு ரயில்களில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து 76 சிறப்பு ரயில்களும், சென்னை எழும்பூரில் இருந்து 15 சிறப்பு ரயில்களும், திருவள்ளூரில் இருந்து 22 சிறப்பு ரயில்களும், காட்பாடி மற்றும் செங்கல்பட்டு சந்திப்பு ஆகிய ரயில் நிலையங்களில் தலா 9 சிறப்பு ரயில்களும் புறப்பட்டு சென்றன.

மேலும் காஞ்சிபுரம், அரக்கோணம் சந்திப்பு, ஜோலாா்பேட்டை ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து தலா ஒரு ரயிலும் புறப்பட்டு சென்றது.