தெற்கு ரயில்வேயில், சென்னை 🔄 மதுரை உட்பட, 13 வழித்தடங்களில், தனியார் நவீன ரயில்களை இயக்க, ரயில்வே அமைச்சகம் அழைப்பு

நாடு முழுதும், 109 வழித்தடங்களில், 151 நவீன ரயில்களை இயக்க, தனியாருக்கு, ரயில்வே அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது.

பயணியர் ரயில் போக்குவரத்தில், ஆண்டுக்கு, 40 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதால், தனியாருக்கு அனுமதி அளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. தனியார் துறை முதலீட்டால், ஆண்டுக்கு, 30 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைப்பதுடன், கூடுதல் வேலை வாய்ப்புகள் உருவாகும் என, ரயில்வே அமைச்சகம் தெரிவித்துஉள்ளது.

இத்திட்டத்தில், தெற்கு ரயில்வேயில், தமிழகம், கேரளாம் மற்றும் ஆந்திராவில், 13 வழித்தடங்களில், 26 ரயில்கள் இயக்க அனுமதிக்கப்பட உள்ளது. இந்த ரயில்களை, இரு வழிகளில் தினமும் இயக்கவும், வாரத்தில், ஒரு நாள், இரண்டு நாள் மற்றும் மூன்று நாட்கள் இயக்கவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளன.

ரயில்கள் விபரம்:
சென்னை 🔄 மதுரை
புதுச்சேரி 🔄 செகந்திராபாத் (வழி சென்னை)
சென்னை 🔄 கோவை
திருநெல்வேலி 🔄 கோவை
திருநெல்வேலி 🔄 சென்னை
திருச்சி 🔄 சென்னை
கன்னியாகுமரி 🔄 சென்னை
கன்னியா குமரி 🔄 எர்ணாகுளம்
சென்னை 🔄 புதுடில்லி
சென்னை 🔄 ஹவுரா 
மேற்கொண்ட ரயில்களை, இரு வழியிலும், தினசரி ரயில் இயக்க, தனியாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் மங்களூர் 🔄 சென்னை வாராந்திர ரயில், சென்னை 🔄 மும்பைக்கு வாரம் இருமுறை, கொச்சுவேலி 🔄 கவுஹாத்தி இடையே, வாரத்தில் மூன்று நாட்கள் என, 13 வழித்தடங்களில் ரயில்கள் இயக்க, ரயில்வே அமைச்சகத்தால் அனுமதி அளிக்கப்பட உள்ளது.

இந்தியாவில் தனியார் ரயில் போக்குவரத்தை மேற்கொள்ள, பம்பார்டியர் இந்தியா, அதானி போர்ட்ஸ், டாடா ரியாலிட்டி, பிரான்சின், அல்ஸ்தாம், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த, டல்கோ, மெக்குயர் குழுமம் ஆகியவை ஆர்வமாக உள்ளன.