ஜூன் 30ம் தேதி வரை பயணிகள் ரயில் சேவைகள் ரத்து : முன்பதிவு செய்தவர்களுக்கு கட்டணத்தை திருப்பி அளிக்க ரயில்வே வாரியம் உத்தரவு


ஜூன் 30ம் தேதி இரவு 12மணி வரை அனைத்து பயணிகள் ரயில் சேவைகளையும் ரத்து செய்து, இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் புறநகர் ரயில்களும், மெட்ரோ ரயில்களும்  ஜூன் 30ம் தேதி இரவு 12மணி வரை இயங்காது.

கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் பொது முடக்கம் அமலில் உள்ளது. இதன் காரணமாக அணைத்து விதமான பயணிகள் ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் சரக்கு ரயில்கள், புலம்பெயர்ந்தவர்களின் நலனை கருத்தில் கொண்டு 'ஷர்மிக்' சிறப்பு ரயில்களும், 15 வழித்தடங்களில் சிறப்பு ரயில்களும் இயங்கி வருகின்றது.

பி.ஆர்.எஸ்., யுடிஎஸ் டிக்கெட் கவுண்டர்கள் மூடப்பட்டுள்ளது. இந்த கால கட்டத்தில் முன்பதிவு அலுவலகத்தில் டிக்கெட் கவுண்டர்களில் புதிய முன் பதிவு எதுவும் செய்யப்படாது.

இந்நிலையில் ஜூன் 30ம் தேதி வரை முன்பதிவு செய்தவர்களுக்கு பயண கட்டணத்தை திருப்பி அளிக்க ரயில்வே வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் மறுஅறிவிப்பு வரும் வரை அனைத்து விதமான பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாகவும், புலம்பெயர்ந்தவர்களுக்கு இயக்கப்படும் 'ஷர்மிக்' சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஷர்மிக் சிறப்பு ரயில்களை போல 300 சிறப்பு ரயில்கள் நாடு முழுவதும் இயக்கப்படும் என்றும், இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் சென்னையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகாரித்து வருவதால் சென்னையில் மே 31ம் தேதி வரை ரயில் இயக்க வேண்டாம் என முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆன்லைன் டிக்கெட்டுகள் தானாகவே ரத்து செய்யப்பட்டு அதற்கான முழு தொகை பயணிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுவிடும். 

கவுன்ட்டா்களில் டிக்கெட்டுகளை வாங்கிய பயணிகள், ரயில் நிலைய கவுன்ட்டரில்தான் டிக்கெட்டுகளை ரத்து செய்ய வேண்டும். அதற்கான காலக்கெடுவை ரயில்வே நிா்வாகம்  ஏற்கனவே நீடித்துள்ளது.