விரைவில் நாடு முழுவதும் கூடுதல் ரயில்கள் இயக்கப்படும் : ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்கள் 2 அல்லது 3 நாட்களில் செயல்படும் என்றும் ரயில்வே அமைச்சர் தகவல்கொரோனா தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம் தற்போது படிப்படியாக தளர்வுகளை கண்டு வருகிறது. இதன் காரணமாக பொது போக்குவரத்தும் சில பகுதிகளில் துவங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜூன் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் குளிர்சாதன வசதி அல்லாத 100 ஜோடி சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என மத்திய அரசு நேற்று அறிவித்தது. அதற்கான முன்பதிவு இன்று முதல் நடைபெற்று வருகிறது.

பயணசீட்டு முன்பதிவு துவங்கிய 2 மணி நேரத்தில் 4 லட்சம் பயணசீட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில் ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டு வர வேண்டிய தருணம் வந்துவிட்டதாகவும், இதனால் நாடு முழுவதும் கூடுதல் ரயில்கள் இயக்குவது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் 1.7 லட்சம் பொது சேவை மையங்களில் ரயில் பயண சீட்டு முன்பதிவு நடைபெறும் என்றும், 2 அல்லது 3 தினங்களில் ரயில் நிலையத்தில் உள்ள முன்பதிவு மையங்கள் செயல்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

ரயில்களில் பயணிக்கும் பயணிகள் கவனத்திற்கு
  • ரயில் புறப்படுவதற்கு 90 நிமிடங்கள் முன்பாகவே ரயில் நிலையத்திற்கு பயணிகள் வர வேண்டும்.
  • பயணிகள் கொரோனா தொற்று சோதனைக்கு பிறகே பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
  • கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டால், பயண கட்டணம் திருப்பி அளிக்கப்படும். பயணம் மேற்கொள்ள முடியாது.
  • பயணிகள் பயண முடியும் வரை முக கவசம் அணிய வேண்டும். மேலும் சமூக இடைவெளியையும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.
  • மேலும் பயணிகள் ஆரோக்கிய சேது செயலியை தங்களது அலைபேசியில் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
புதியது பழையவை