மகாராஷ்டிராவில் இருந்து 1250 தமிழகர்கள் ரயில் மூலம் நாளை திருச்சிக்கு வருகைதமிழகத்தில் இருந்தும் வெளிமாநிலத்தினர் சிறப்பு ரயில்களில் கிளம்பிச் சென்றபடி உள்ளனர். இருப்பினும், வெளிமாநிலங்களில் சிக்கியவர்களில் இதுவரை எவரும் சிறப்பு ரயிலில் தமிழகம் திரும்பவில்லை. இதற்கு தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை என்றும், கொரோனா தொற்று அதிகரித்து வருவதும் காரணமாக கூறப்பட்டது.

இந்நிலையில், மகாராஷ்டிராவின் ஷோலாப்பூர் மாவட்டம் பந்தர்பூர் ரயில் நிலையத்தில் இருந்து முதல் நேரடி சிறப்பு ரயில் இன்று பிற்பகல் 3மணிக்கு திருச்சி நோக்கி கிளம்பியுள்ளது. இதில் 1250 தமிழர்கள் பயணிக்கின்றனர். இந்த சிறப்பு ரயில் நாளை காலை 6 மணிக்குச் திருச்சிக்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதே போல், குஜராத்தில் 2,400 தமிழர்களுடன் தயாராக இருக்கும் 2 ரயில்களுக்கும் தமிழகம் திரும்ப அரசு அனுமதித்துள்ளது. மேலும் டெல்லியில் இருந்தும் ரயில்களில் தமிழர்களை அழைத்துவர ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சிறப்பு ரயில்களில் பயணிக்கும் பயணிகள் அனைவரும் கொரோனா தொற்று மருத்துவப் பரிசோதனை செய்து தொற்றில்லாதவர்களுக்கு அவர்களது வீடுகளிலேயே தனிமையாக இருக்க அனுப்பி வைக்கப்படுவர். ஒரு வேளை தொற்று கண்டறியப்பட்டால் அதற்கான சிகிச்சைகளை தமிழக அரசு வழங்கும்.