பல்வேறு பகுதிகளில் சிக்கித் தவிக்கும் குடிபெயர்ந்த தொழிலாளர்கள், புனிதப் பயணம் சென்றவர்கள், சுற்றுலாவாசிகள், மாணவர்கள் மற்றும் பிறர் தங்களுடைய சொந்த ஊர் களுக்குத் திரும்புவதற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட உத்தரவின்படி, 'ஷ்ராமிக்' சிறப்பு ரயில்களை இயக்க இந்தியன் ரயில்வே முடிவு செய்துள்ளது.

அதன்படி மே 11ம் தேதி வரையில் பல்வேறு மாநிலங்களில் மொத்தம் 468 'ஷ்ராமிக்' சிறப்பு ரயில்களை இந்தியன் ரயில்வே இயக்கியுள்ளது. அவற்றில் 363 சிறப்பு ரயில்கள் திட்டமிட்ட இடத்தைச் சென்று சேர்ந்துவிட்டன. இதர 105 ரயில்களின் பயணம் இன்னும் நிறைவடையவில்லை.

மாநில வாரியாக இயக்கப்பட்ட ரயில்கள் விவரம்
ஆந்திரா (1), பிகார் (100), இமாச்சலப் பிரதேசம் (1 ரயில்), ஜார்க்கண்ட் (22), மத்தியப் பிரதேசம் (30), மகாராஷ்டிரம் (3), ஒடிசா (25), ராஜஸ்தான் (4), தெலங்கானா (2), உத்தரப் பிரதேசம் (172), மேற்குவங்கம் (2), தமிழகம் (1) என பல்வேறு மாநிலங்களுக்கு 363 ரயில் சேவைகள் இயக்கப்பட்டுள்ளன.

குடிபெயர்ந்த தொழிலாளர்களை திருச்சி, திட்லகர், பராவ்னி, காண்ட்வா, ஜெகநாதபுரம், குர்டா சாலை, பிரயாக்ராஜ், ச்சாப்ரா, பாலியா, கயா, புர்ணியா, வாரணாசி, தர்பங்கா, கோரக்பூர், லக்னோ, ஜாவுன்பூர், ஹாட்டியா, பாஸ்டி, காடிஹர், தனப்பூர், முசாபர்பூர், சஹர்சா உள்ளிட்ட நகரங்களுக்கு இந்த ரயில்கள் அழைத்துச் சென்றுள்ளன.

இந்த ஷ்ராமிக் சிறப்பு ரயில்களில், சமூக இடைவெளி விதிகளை கடைபிடித்து சுமார் 1200 பேர் பயணம் செய்ய முடியும். பயணிகள் ரயிலில் ஏறுவதற்கு முன்பு மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. மேலும் பயணத்தின் போது அவர்களுக்கு இலவச உணவும், தண்ணீரும் வழங்கப்படுகிறது.