சென்னை ⇄ புது டெல்லி இடையே வாரத்தில் இரண்டு நாட்களுக்கு குளிர்சாதன சிறப்பு ரயில் : சென்னைக்கு ரயில் இயக்க வேண்டாம் தமிழக முதல்வர்நாளை மறுநாள்(மே 12) முதல் சிறப்பு பயணிகள் ரயில் சேவை இயக்கப்படும் என ரயில்வே அமைச்சகம் நேற்று(மே 10) தெரிவித்தது.

முதற்கட்டமாக டெல்லியில் இருந்து சென்னை, திருவனந்தபுரம், பெங்களூர், செக்கந்தராபாத், மட்கோன்(கோவா), மும்பை, புவனேஸ்வர், அகமதாபாத், ஜம்மு தாவி, ராஞ்சி, பிலாஸ்பூர், பாட்னா, ஹௌரா, அகர்தலா மற்றும் திப்ருகர் உள்ளிட்ட 15 நகரங்களுக்கு இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது.

இந்நிலையில் சென்னை ⇄  புது டெல்லி இடையே இயக்கப்படும் ரயில், டெல்லியில் இருந்து 13ம் தேதி முதலும், சென்னையில் இருந்து 15ம் தேதி முதலும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

சென்னையில் இருந்து வெள்ளி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் காலை 6:35க்கு புறப்பட்டு, மறுநாள் காலை 10:30க்கு டெல்லி சென்றடையும்.

மறுமார்கத்தில் டெல்லியில் இருந்து புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மாலை 4மணிக்கு புறப்பட்டு, மறுநாள் இரவு 8:40க்கு சென்னை சென்ட்ரல் வந்து சேரும்.மேற்கொண்ட சிறப்பு ரயில்கள் விஜயவாடா, வாரங்கல், நாக்பூர், போபால், ஜான்சி மற்றும் ஆக்ரா ஆகிய ரயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும்.

முற்றிலும் குளிர்சாதன வசதி கொண்ட இந்த ரயில்களுக்கு ராஜதானி ரயிலுக்கு வசூலிக்கப்படும் கட்டணங்கள் வசூலிக்கப்படவுள்ளது.


  • மேற்கொண்ட சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று(மே 11) மாலை 4மணி முதல் நடைபெறவுள்ளது. ஐஆர்சிடிசி இணைய தளத்தில் மட்டுமே இந்த சிறப்பு ரயில்களுக்கு முன்பதிவு மேற்கொள்ள முடியும்.
  • இந்த சிறப்பு ரயில்களில் பயணிக்கும் பயணிகள் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.
  • கொரோனா தொற்று உள்ளவர்கள் பயணிக்க முடியாது.
  • முன்பதிவு செய்தவர்களை தவிர மற்ற நபர்கள் ரயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

இந்நிலையில் சென்னையில் கொரோனோ தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் வருகின்ற 31ம் தேதி வரை சென்னைக்கு ரயில்கள் இயக்க வேண்டாம் என பிரதமர் மோடியுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுத்துள்ளார்.