சேலத்தில் இருந்து ஹரியானா மாநிலத்திற்கு சரக்கு ரயிலில் பருத்தி விதைகள் அனுப்பிவைப்பு

நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அத்தியாவசியப் பொருட்களை வெளியிடங்களுக்கு கொண்டு செல்வதில் வர்த்தகர்கள் உற்பத்தியாளர்கள் உள்பட அனைத்து தரப்பினருக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில் சேலம் ரயில்வே கோட்டம் அத்தியாவசிய பொருட்களை நாட்டின் பல்வேறு இடங்களுக்கு , சரக்கு ரயில்கள் மூலம் அனுப்பி வைப்பதற்கு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக பார்சல் வேன்கள் கொண்ட சிறப்பு ரயில்களை ரயில்வே நிர்வாகம் இயக்குகிறது.


இந்நிலையில், சேலத்திலிருந்து பருத்தி விதை மூட்டைகளை ஹரியானா மாநிலத்திற்கு அனுப்புவதற்கு சேலம் ரயில்வே கோட்ட முதுநிலை வணிக மேலாளர் ஹரிகிருஷ்ணன் சிறப்பு கவனம் செலுத்தினார்.

குறிப்பாக, சேலத்தில் இருந்து ஹரியானா மாநிலம் ஹிசார் நகருக்கு ஒரு சரக்கு ரயில் 468 டன் பருத்தி விதைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பருத்தி விதை மூட்டைகள் அனுப்பப்படும் முன்னர் ரயில்வே தொழிலாளர்கள் அனைவருக்கும் தெர்மல் ஸ்கேனர் மூலம் காய்ச்சல் குறித்த சோதனை நடத்தப்பட்டது மேலும் தொழிலாளர்கள் அனைவருக்கும் கிருமிநாசினி கொண்டு கை கழுவ ஏற்பாடு செய்யப்பட்டது.


அதே சமயம் தொழிலாளர்களை முக கவசம் அணிந்து சமூக இடைவெளி விட்டு  பருத்தி மூட்டைகளை சரக்கு ரயிலில் ஏற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது.

இந்த பருத்தி விதைகளை சரக்கு ரயிலில் அனுப்பியதன் மூலம் சேலம் ரயில்வே கோட்டத்துக்கு ரூ. 27 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

இதனை சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் சுப்பாராவ் மற்றும் கூடுதல் கோட்ட மேலாளர் அண்ணாதுரை ஆகியோர் பாராட்டினர்.

இந்த சரக்கு ரயில்களின் இயக்கம் குறித்து முதுநிலை வணிக மேலாளர் இ. ஹரிகிருஷ்ணன்  கூறுகையில், நாட்டின் பல்வேறு இடங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு சரக்குகளை அனுப்புவதற்கு சிறப்பு பார்சல் வேன்களை கொண்டு சேலம் கோட்டம் ரயில்களை இயக்கி வருகிறது என்றும், இந்த வாய்ப்பினை வர்த்தகர்கள் உற்பத்தியாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.
புதியது பழையவை