
ஊரடங்கு தளர்த்தப்படும் சூழ்நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் மட்டுமல்லாது எழும்பூர் ரயில் நிலையம், புறநகர் ரயில்கள் செல்லக்கூடிய ரயில் நிலையங்களில் நடைமேடை மற்றும் டிக்கெட் கவுண்டர்களின் சமூக இடைவெளி இருக்க வேண்டும். இதனை பின்பற்றுவதற்காகவும், பயணிகள் கூட்டமாக சென்று ரயிலில் ஏறுவதை தவிர்ப்பதற்காக கோடுகள் வரையப்பட்டுள்ளது.
இந்த கோடுகளை பின்பற்றி தான் பொதுமக்கள் ரயில் சேவையை பயன்படுத்த வேண்டும் என்பதையும் அதற்கான ஏற்பாடுகளையும் தெற்கு ரயில்வே தற்போது செய்து வருகிறது.
சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் இதற்காக 6 அடி இடைவெளி விட்டு கோடுகள் வரையப்பட்டு வருகிறது. இந்த ஏற்பாடுகள் முடிந்த பிறகு மக்கள் எவ்வாறு பயணிக்க வேண்டும், ஊரடங்கு தளர்த்திய பிறகு என்பதற்கான அனைத்து ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை செய்து தெற்கு ரயில்வே அறிவிக்க உள்ளது.

இது தவிர ரெயில் நிலையத்தின் முக்கிய பகுதிகளில் 600 பேர் சமூக இடைவெளியுடன் நிற்கவும், அமரவும் கோடுகள் வரையப்பட்டுள்ளது. பயணிகளின் உடல் வெப்ப நிலையை தெர்மல் கருவி மூலம் சோதனை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோன்று சமூக இடைவெளியை குறிக்கும் அடையாளங்கள் மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட சில முக்கிய ரெயில் நிலையங்களில் இடம்பெற உள்ளது.