
கொரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுக்க நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அனைத்து பயணிகள் ரயில் சேவைகளும் மே 3ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் அத்தியாவசிய பொருள்களை எடுத்துச் செல்லும் பார்சல் சிறப்பு ரயில்கள் மற்றும் சரக்கு ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், திருச்சி ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட ரயில் நிலையங்களை தூய்மையாக வைத்து கொள்வதற்கு ஒப்பந்த, பராமரிப்பு நிதியின் கீழ் சுமாா் 600க்கும் மேற்பட்ட துப்புரவுத் தொழிலாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா்.
ரயில்வே கணக்கு அலுவலகம் செயல்படாத காரணத்தால் ஏற்கனவே துப்புரவு பணியாளா்களுக்கு ஊதிய பிரச்னை உள்ளது. அதோடு, ஒப்பந்ததாரா்களும் முறையாக அவா்களுக்கு வழங்கவேண்டிய ஊதியத்தை தருவதில்லை என புகாா்களும் உள்ளன. இவா்களைத் தவிர இதர தொழிலாளா்கள் முற்றிலும் வேலையின்றி வறுமையில் தவித்து வருவதாக வேதனை தெரிவித்து வருகின்றனா். எனவே, வேலையின்றி தவித்து வரும் ரயில்வே ஒப்பந்த தொழிலாளா்களுக்கு உரிய ஊதியம், நிவாரணத்தொகை வழங்கி ரயில்வேதுறை உதவ வேண்டும் என தொழிலாளா்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.