ரயில் நிலையத்தை வாழ்வாதாரமாக கொண்டவர்களுக்கு மதுரை ரயில்வே கோட்டம் உதவி

Image

ரயில் நிலையங்களில் ரயில்வே ஊழியர்கள் தவிர பல்வேறு அமைப்புசாரா தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களில்  பயணிகளின் உடமைகளை சுமந்துசெல்லும் கூலி போட்டர்கள், ரயில் பெட்டிக்கு அருகில் வந்து பயணிகளுக்கு தேவையான தேனீர், உணவு பண்டங்கள் ஆகியவற்றை விற்பனை செய்பவர்கள்  ஆகியோருக்கு ரயில் நிலைய இயக்கம் தான் வாழ்வாதாரம். ஆனால் தற்போதைய ஊரடங்கு காரணமாக ரயில்கள் இயக்கப்படாததால் இவர்கள் உரிய வருமானமின்றி மிகவும் சிரமப்படுகிறார்கள்.மதுரை கோட்ட முது நிலை வர்த்தக மேலாளர் வி.பிரசன்னா, கோட்ட வர்த்தக மேலாளர் எம்.பரத்குமார் ஆகியோருடைய ஆலோசனையின் பேரில் மதுரை  கோட்ட வர்த்தக பிரிவு ஊழியர்கள் தங்களுக்குள் குழு அமைத்து வருமானமின்றி வாடும் கூலி போர்ட்டர்களுக்கும், தேனீர் விற்பவர்களுக்கும் உதவ முன் வந்தார்கள்.

வர்த்தக பிரிவு ஊழியர்கள் தங்களின் சொந்த சேமிப்பின் வாயிலாக அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், உப்பு, சர்க்கரை, புளி, கோதுமை மாவு போன்ற சமையல் பொருட்களை மொத்தமாக வாங்கி அவற்றை ஒரு மாதத்திற்கு தேவையான அளவில் 200 மூடைகளாக தயார் செய்தனர். இந்த சமையல் பொருட்கள் இன்று (10.4.2020) மதுரை ரயில் நிலையத்தில் கூலி போர்ட்டர்களுக்கும், தேநீர் விற்பனையாளர்களுக்கும் வழங்கப்பட்டது.
இதேபோல நேற்று (09.4.2020) தாழையூத்து அருகே உணவின்றி தவித்த வட நாட்டைச் சேர்ந்த 50 ரயில்வே ஒப்பந்த ஊழியர்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, காய்கறிகள் மற்றும் மளிகை சாமான்கள் திருநெல்வேலி ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் சார்பாக அளிக்கப்பட்டது.

இன்று (10.4.2020) மதுரை மாநகரில் ஏழை எளிய மக்களுக்கு இந்திய உணவு மற்றும் சுற்றுலா வளர்ச்சி கழகம் (IRCTC)  சார்பாக 1430 எலுமிச்சை சாத  பொட்டலங்கள் வழங்கப்பட்டது. இந்த தன்னலமற்ற சேவையை மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் வி. ஆர். லெனின்  பாராட்டினார்.