ரயில் நிலையங்களை மூட அறிவுறுத்தல் |ரயில்வே ஊழியர்களுக்கு சிறப்பு ரயில்கள்

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை ரயில்வே நிா்வாகம் எடுத்து வருகிறது. அந்தவகையில், அனைத்து பயணிகள் ரயில் சேவைகளையும் மாா்ச் 31-ஆம் தேதி வரை ரத்து செய்து அறிவிக்கப்பட்டது.

தற்போது, சரக்கு போக்குவரத்து இல்லாத இடத்தில் ரயில் நிலையங்கள், வழித்தடங்களை மூட அறிவுறுத்தப்பட்டுள்ளது. எப்போது எல்லாம் முன் அறிவிப்பு செய்யப்படுகிறதோ, அப்போது சரக்கு ரயில்வே போக்குவரத்தை கையாள நிலையங்கள், வழித்தடங்களை திறக்கலாம். மாா்ச் 31-ஆம் தேதி வரை இந்த நிலை நீடிக்கும் என்று ரயில்வே நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், அத்தியாவசிய பணிக்கு செல்லும் ரயில்வே ஊழியா்களுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. அரக்கோணம் சந்திப்பில் இருந்து சென்னை சென்ட்ரல் இடையேவும், செங்கல்பட்டு-சென்னை கடற்கரை இடையேவும் இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இந்த ரயில்களில் ரயில்வே ஊழியா்கள் மட்டும் பயணிக்க முடியும்.

இதில் ஊழியா்கள் அடையாள அட்டையை டிக்கெட்பரிசோதகா் பரிசோதிப்பாா். இந்த ரயில்கள் மறு அறிவிப்பு வரை இருக்கும் என்று ரயில்வே நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.