நாடாளுமன்ற மாநிலங்களவையில் பிப்ரவரி 7 நேற்று  மாலையில் நடைபெற்ற விவாதத்தில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எழுப்பிய கேள்விகளுக்கு ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் பதிலளித்தார்.

இதுதொடர்பாக வைகோ எழுப்பிய கேள்வி:

“புத்தாண்டின் தொடக்க நாளில், ரயில் கட்டணங்களை உயர்த்தி அரசு வெளியிட்ட அறிவிப்பு மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கின்றது. குளிர்சாதனம் அல்லாத சாதாரண ரயில்களில், அனைத்து வகுப்புகளுக்கும் கட்டணம் உயர்த்தப்பட்டு இருக்கின்றது. ரயில்வே துறையைப் புதுப்பிப்பதற்கும், புதிய வசதிகளை ஏற்படுத்துவதற்கும் பணம் தேவைப்படுவதாக அமைச்சர் சொல்கின்றார்.

டெல்லியில் இருந்து தெற்கு நோக்கிச் செல்லுகின்ற தமிழ்நாடு, கிராண்ட் ட்ரங்க், கேரளா, கர்நாடகா விரைவு ரயில்களில் என்ன வகையான பெட்டிகளை இணைக்கின்றீர்கள்?

புறநகர் ரயில்களின் கட்டணத்தை உயர்த்தவில்லை. அதுபோல, குளிர்சாதனம் அல்லாத இரண்டாம் வகுப்புப் பெட்டிகளுக்கான கட்டண உயர்வையும் விலக்கிக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன். அன்றாடக் கூலிகள், விவசாயிகள், கைத்தறித் தொழிலாளர்கள் போன்ற உழைப்பாளர்கள், இரண்டாம் வகுப்பைப் பயன்படுத்துகின்றார்கள். அதற்கான கட்டண உயர்வை அரசு திரும்பப் பெற்றுக்கொள்ளுமா என்பதை அமைச்சரிடம் இருந்து அறிய விரும்புகின்றேன்”

அதற்கு ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் பதிலளித்து பேசியதாவது:

“இந்திய ரயில்வே துறை, பயணிகளுக்கான வசதிகளை தொடர்ந்து மேம்படுத்திக்கொண்டே இருக்கின்றது. அதற்காக, இந்த ஆண்டு மட்டும் 55 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படுகின்றது. எனவே, இந்தக் கட்டண உயர்வு என்பது, கடலில் ஒரு துளியைப்போல மிகச்சிறிய உயர்வுதான். தேவையான நிதியைத் திரட்டுவதில், ரயில்வே துறை முழுமையாகத் தன்னிறைவு அடைய வேண்டும். இல்லையென்றால், பயணிகளுக்குத் தேவையான புதிய வசதிகள் எதையும் செய்து தர முடியாமல் போய்விடும்” என்றார்.

அப்போது, வைகோ “மின் பயணச் சீட்டு வழங்குவதில் நடைபெறுகின்ற முறைகேடுகளால், ரயில்வே துறைக்கு மாதந்தோறும் 10 முதல் 15 கோடி இழப்பு ஏற்படுவது, அண்மையில் தெரிய வந்துள்ளது. ஐஆர்சிடிசி கணினி முன்பதிவில் உள்ள பாதுகாப்புக் குறைபாடுகளால், பலர் முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். எதிர்காலத்தில் முறைகேடுகளைத் தடுக்கின்ற வகையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுமா?” என கேள்வியெழுப்பினார்.

அதற்கு பதிலளித்த பியூஷ் கோயல், “தொழில்நுட்பங்கள் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டுக்கொண்டே வருகின்றன. ஐஆர்சிடிசி மற்றும் சிஆர்ஐஎஸ் ஆகியவை எங்களுடைய கைகளைப் போன்றது. எனவே, அவற்றுக்கான தொழில்நுட்பத்தைத் தொடர்ந்து மேம்படுத்திக்கொண்டே வருகின்றோம்.

ஆனால், இதில் இரண்டு கூறுகளைக் கவனிக்க வேண்டும்.

உலகம் முழுமையுமே, கணினிகளில் ஊடுருவுகின்றவர்கள், தொழில்நுட்பத்தில் ஒரு படி முன்னேதான் இருக்கின்றார்கள். நீங்கள் ஒரு நெருப்பு வளையத்தை ஏற்படுத்தினால், அதற்கு எதிராக அவர்கள் மற்றொரு வகையில் ஊடுருவுகின்றார்கள். ஒரு தடையை நீங்கள் உடைத்தால், அவர்கள் மற்றொரு தடையை ஏற்படுத்துகின்றார்கள். அந்த அளவுக்கு, இன்றைய இளைஞர்கள் கண்டுபிடிப்புகளில் முன்னேறி இருக்கின்றார்கள். ஆனால், அவை அனைத்தையும் நாங்கள் கடந்து வருவோம் என்று நம்புகிறேன்” என பியூஷ் கோயல் பதிலளித்தார்.