நாமக்கல் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை ஏற்று நாமக்கல் வழியாக சேலம் - கரூர் அகல ரயில் பாதை அமைக்கப்பட்டது. இவ்வழியாக சென்னை, பெங்களூரு, மும்பை, ஐதராபாத், ராமேஸ்வரம், நாகர்கோவில் மற்றும் பழனி போன்ற ஊர்களுக்கு ரயில் இயக்கப்படுகிறது. நாமக்கல்லில் இருந்து சென்னை செல்வதற்கு தற்போது 22651/22652 சென்னை - பாலக்காடு(வழி பழனி) விரைவு ரயில் மட்டுமே உள்ளது.

இந்நிலையில், தகவல் உரிமை அறியும் சட்டம் மூலம் நாமக்கல்லில் இருந்து பாலக்காடு - சென்னை விரைவு வண்டியில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 75 - க்கு மேல் பயணிகள் பயணம் மேற்கொள்வது தெரியவந்துள்ளது. ஆனால் இந்த ரயிலில் பயணசீட்டு கிடைப்பது மிகவும் கடினமானது. இதன் காரணமாக மக்கள் பேருந்தை நம்பி உள்ளனர். நாள் ஒன்றுக்கு நாமக்கல்லில் இருந்து சென்னை செல்வதற்கு 60 - க்கு மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன.


தற்போது சென்னை சென்ட்ரல் - மதுரை இடையே இயங்கி வரும் 20601/20602 குளிர்சாதன வாராந்திர விரைவு ரயில் ஜூன் 10ம் தேதி முதல், வாரத்திற்கு மூன்று முறை இயங்கும் என தெற்கு ரயில்வே செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் நாமக்கல் வழியாக செல்லும் இந்த குளிர்சாதன விரைவு ரயில், நாமக்கல்லில் நிற்காமல் செல்கிறது. 

இந்த ரயில் நாமக்கல்லில் நின்று செல்லும் பட்சத்தில் சென்னை செல்வதர்க்கு கூடுதல் ரயில் ஆக இது அமையும். இதனை வலியுறுத்தி மக்களவை உறுப்பினர் திரு A. K.P. சின்ராஜ் அவர்கள் சமீபத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். இதே போல தற்போது நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதில் சென்னை - மதுரை குளிர்சாதன ரயிலை நாமக்கல்லில் நிறுத்தி செல்லவும், எழும்பூர் - சேலம் ரயிலை நாமக்கல் வழியாக கரூர் வரை நீடிக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் வாரத்தில் 6 நாட்கள் இயங்கும் அனைத்து பயணிகள் ரயில்களையும் 7 நாட்களும் இயக்கிட கோரிக்கை விடுத்துள்ளனர்.


தென்னக ரயில்வே இக்கோரிக்கை நிறைவேற்ற வேண்டும் என்பது  நாமக்கல் பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.