மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை கடந்த சனிகிழமை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இவ்வாறு தாக்கல் செய்யும் போது ரயில்வே திட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு போன்ற விபரங்கள்  அன்று வெளியிடப்படவில்லை. தற்போது  ரயில்வே வாரியம் தங்கள் இணையதளத்தில் ரயில்வே திட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, புதிய திட்டங்கள் எதாவது அறிவிக்கப்பட்டுள்ளதா போன்ற விபரங்களை வெளியிட்டுள்ளது.

        தமிழ்நாடு இந்தியாவில் உள்ள மாநிலங்கள் அளவில் ஜிடிபியில் மூன்றாவதும், மக்கள் தொகை அடிப்படையில் அறாவது இடத்திலும் உள்ள மாநிலம் ஆகும். தற்போது தமிழ்நாட்டில் மொத்தம் 4027.08 கி.மீ தூரத்துக்கு ரயில்வே இருப்புபாதை வழித்தடங்கள் உள்ளது. இந்த ரயில்பாதைகளை சென்னையில் தலைமையிடமாக கொண்ட தெற்கு ரயில்வே மண்டலம் வழியாக சென்னை, மதுரை, திருச்சி, சேலம் கோட்டங்கள் வழியாக நிர்வகிக்கப்படுகிறது.  ரயில்வேத்துறை வளர்ச்சி என்றால் புதிய வழித்தடங்களில் இருப்புபாதை வழித்தடங்கள் அமைத்தல், ஒரு வழிபாதையாக உள்ள பாதைகளை இருவழிபாதையாக மாற்றம் செய்தல், மின்மயமாக்கல், மீட்டர் கேஜ் பாதைகளை அகல பாதையாக மாற்றம் செய்தல், ரயில்வே சம்மதமான தொழிற்சாலைகள் அமைத்தல் ஆகியவற்றை ரயில்வேதுறை வளர்ச்சி என்று கூறலாம்.  இந்த வருடம் அறிவித்த மற்ற திட்டங்கள் அனைத்தும் தெற்கு தேய்கிறது வடக்கு வாழ்கிறது என்ற சொல்லுக்கு ஏற்ப வடஇந்தியாவுக்கே அறிவிக்கப்பட்டுள்ளது.


ரயில் அடர்த்தி:

      மக்கள்தொகை அடர்த்தியை போன்று ரயில் அடர்த்தியையும் கணக்கிட்டு வருகின்றார்கள். தமிழகம் அகில இந்திய அளவில் வளர்ச்சியில் இரண்டாவது பொரிய மாநிலம் ஆகும். இந்த ரயில்அடர்த்தி என்பது 1000 சதுர கி.மீ பரப்பளவில் எவ்வளவு ரயில்வே இருப்புபாதைகள் உள்ளன என்பதை கணக்கிடுவது ஆகும். தமிழ்நாடு தற்போது 32.07 ரயில் அடர்த்தி உள்ளது. இதை படிபடியாக 50 வரை அதிகரிக்க வேண்டும். உத்திரபிரதேசம், பஞ்சாப், ஹரியானா, பீகார், மேற்குவங்காளம் ஆகிய மாநிலங்கள் தமிழகத்தை விட  முன்னில் உள்ளன. தமிழகம் மத்திய அரசுக்கு செலுத்தும் வரிவருவாயில் இரண்டாம் இடத்தில் உள்ளன. வரிவருவாயில் இரண்டாம் இடத்தில் உள்ளதை போன்று ரயில்அடர்த்தியிலும் இரண்டாம் இடத்துக்கு வரவேண்டும். இதற்கு குறைந்தபட்சம் வருடத்துக்கு ஒரு புதிய இருப்புபாதை திட்டத்தையாவது செயல்படுத்த அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் மட்டுமே தமிழகம் வளாச்சி பாதையில் செல்லும்.
 

தமிழகத்தில் தற்போது நடைபெற்றுவரும் புதிய இருப்புபாதை திட்டங்கள்:

1. மதுரை – தூத்துக்குடி  வழி அருப்புகோட்டை 143.5 கி.மீ
2. திண்டிவனம் - செஞ்சி – திருவண்ணாமலை 70 கி.மீ   3. திண்டிவனம் - நகரி 179.2 கி.மீ  
4. அத்திபட்டு – புத்தூர் -88.30 கி.மீ    
5. ஈரோடு – பழநி 91.05 கி.மீ  
6. சென்னை  - கடலூர் வழி மகாபலிபுரம் 179.28 கி.மீ
7. ஸ்ரீபெரும்புர்}ர் - கூடவாஞ்சேரி – 60 கி.மீ
8. மொரப்பூர்  - தர்மபுரி – 36 கி.மீ
9. ராமேஸ்வரம் - தனுஷ்கோடி -  17.2 கி.மீ
10. பெங்களுர் - சத்தியமங்கலம் -  260 கி.மீ


         தமிழகத்தில் சுமார் 5000 கி.மீ தூரத்துக்கு புதிய இருப்புபாதை அமைக்க பொறியியல் மற்றும் போக்குவரத்து சர்வே செய்யப்பட்டுள்ளது. இதில் இந்த ஆண்டு எந்த ஒரு புதிய ரயில்பாதை அமைக்கும் திட்டமும் அறிவிக்கப்படவில்லை. முன்பு ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கும் மிக்குறைந்த அளவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆறு மாதத்துக்கு முன்பு ரயில்வே வாரியம் தெற்கு ரயில்வேக்கு அனுப்பிய கடிதத்தில் தெற்கு ரயில்வேக்கு உள்ள நடக்கும் புதிய இருப்புபாதை திட்டங்களில் 10 திட்டங்களுக்கு நிதிஒதுக்க வேண்டாம் என்றும் அனைத்து பணிகளையும் ரத்து செய்து முடக்கி வைக்கும்படி தெரிவித்தது. தற்போது பட்ஜெட்டில் இந்த திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி ஒரு திட்டத்துக்கு வெறும் 1000 ருபாய் வீதமே ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஒதுக்கப்பட்டுள்ளதை பார்த்தால் இந்த திட்டங்கள் அனைத்தையும் ரயில்வேத்துறை ரத்து செய்துள்ளது என்று தெளிவாக தெரிகிறது.  இந்த பட்ஜெட்டில் மொத்தம் அனைத்து பதிய இருப்புபாதை பணிகளுக்கு என இரண்டு கோடியே 70லட்சத்து 10 ஆயிரம் ருபாய் ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் இரண்டு கோடியே 70 லட்சங்கள் ருபாய் ராமேஸ்வரம் - தனுஷ்கோடி -  17.2 கி.மீ புதிய பாதைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள திட்டங்களில் ஒரு திட்டத்துக்கு ஆயிரம் வீதம் அனைத்துக்கும் சேர்த்து சேர்த்து 10 ஆயிரம் ரூபாய் மட்டுமே ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


1. மதுரை – தூத்துக்குடி

     மதுரையிலிருந்து திருப்பரங்குன்றம், காரியப்பட்டி, அருப்புகோட்டை, பந்தல்குடி, புதூர்நாகலாபுரம், விளாத்திக்குளம், குளத்தூர், மீளவிட்டான் வழியாக வழியாக தூத்துக்குடிக்கு 143.5 கி.மீ தூரத்துக்கு புதிய பாதை அமைக்க 2011-12-ம் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்துக்குவெறும் 1000 ருபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த பட்ஜெட்களில் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து செய்யப்பட்டது. இதை தொடர்ந்து இந்த திட்டத்துக்கு தேவையான நிலத்தையும் தமிழக அரசு ஆர்ஜிதம் செய்து ரயில்வேத்துறையிடம் ஒப்படைத்தது. தற்போது இந்த திட்டத்துக்கு மிகக்குறைந்த நிதி ஒதுக்கீடு செய்து திட்டத்தை ரத்து செய்ய ரயில்வேதுறை முடிவெடுத்துவிட்டதாக தெரிகிறது.


2. திண்டிவனம் - செஞ்சி – திருவண்ணாமலை

            திண்டிவனத்திலிருந்து செஞ்சி வழியாக திருவண்ணாமலைக்கு 70கி.மீ தூரத்துக்கு புதிய
இருப்புபாதை 2006-07-ம் ஆண்டு நிதிநிலைஅறிக்கையில் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்துக்கு
அப்போதைய மத்திய சுகாதாரதுறை அமைச்சர் டாக்டர் அன்புமனிராமதாஸ் அவர்களால் 15-10-2008-ம் தேதி செஞ்சியில் வைத்து ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த திட்டம் ஆறு ரயில் நிலையங்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின அப்போதைய மொத்த திட்ட மதிப்பீடு 900 கோடிகள் ஆகும். இந்த பட்ஜெட்டில் வெறும் 1000 ருபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.


3. திண்டிவனம் - நகரி

          திண்டிவனத்திலிருந்து ஆந்திரா மாநிலத்தில் உள்ள நகரிக்கு புதிய 179.2 கி.மீ தூரத்துக்கு புதிய இருப்புபாதை அதைக்க 2006-07-ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்துக்கு அப்போதைய திட்ட மதிப்பீடு 2300 கோடிகள் ஆகும்.  இந்த திட்டத்துக்கு 06-08-2007-ம் தேதி பழைய ராணிபேட்டை ரயில் நிலையத்தில் வைத்து அடிக்கல் நாட்டப்பட்டு திட்டம் துவங்கப்பட்டது. இந்த பாதை விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளுர், சித்தூர் என 5 மாவட்டங்கள் எட்டு தாலுகாகள் வழியாக செல்லும். இந்த திட்டதில் சுமார் 20 ரயில் நிலையங்கள் அமைக்க திட்டம் உள்ளது. இந்த பட்ஜெட்டில் வெறும் 1000 ருபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.


4. அத்திபட்டு – புத்தூர்   

         அத்திபட்டுவிலிருந்து ஊத்துக்கோட்டை வழியாக புத்தூர்க்கு புதிய இருப்புபாதை 88.30 கி.மீ தூரத்துக்கு புதிய ரயில்பாதை அமைக்க 2008-09-ம் ஆண்டு ரயில்பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டம் முக்கியாமாக சென்னை துறைமுகத்திலிருந்து ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு சரக்கு போக்குவரத்துக்கு என திட்டம் தீட்டப்பட்டு 50சதமானம் நிதியை எண்ணூர் துறைமுக கழகமும், கப்பல்போக்குவரத்து துறையும், ரயில்வேத்துறையும் இணைந்து செயல்படுத்துவது என தீர்மானிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் அப்போதைய திட்ட மதிப்பீடு 528 கோடிகள் ஆகும். பின்னர் எண்ணூர் துறைமுககழகம் எதிர்ப்பார்த்த அளவுக்கு போதிய சரக்கு போக்குவரத்து இருக்காது என கருதி இந்த திட்டத்திலிருந்து பின்வாங்கியது. இது மட்டுமில்லாமல் இந்த திட்டத்துக்கு தேவையான நிலங்கள் கையகப்படுத்துவது பெரும் பிரச்சனையும், நிலத்தின் மதிப்பும் அதிகமாக உள்ள காரணத்தால் இந்த திட்டத்தில்    எண்ணூர் துறைமுக கழகம் ஆர்வம் காட்டவில்லை. இதுவரை ஒப்பந்தபுள்ளியும் கோரப்படவில்லை. இந்த திட்டத்தை ரத்து செய்ய ரயில்வே வாரியம் முடிவு எடுத்து இந்த பட்ஜெட்டில் வெறும் 1000 ருபாய் ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


5. ஈரோடு – பழநி    

         ஈரோடிலிருந்து   சென்னிமலை, தாராபுரம, காங்கேயம் வழியாக பழநிக்கு 91.05 கி.மீ தூரத்துக்கு புதிய இருப்புபாதை அமைக்க 2008-09-ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் மதிப்பீடு 1140 கோடிகள் ஆகும். இந்த திட்டத்துக்கு தேவையான நிதியில் 50 சதமானத்தை தமிழக அரசும் இந்த திட்டத்துக்கு தேவையான நிலத்தை ஆர்ஜிதம் செய்து இலவசமாக ரயில்வேத்துறைக்கு தமிழகஅரசு கொடுத்தால் மட்டுமே இந்த திட்டம் செயல்படுத்தப்படம் என்று ரயில்வே வாரியம் அறிவித்துவிட்டது. தமிழக அரசு இந்த திட்டத்துக்கு தேவையான நிதியை கொடுக்கும் திட்டம் இல்லாத காரணத்தால் இந்த திட்டம் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை ரத்து செய்ய ரயில்வே வாரியம் முடிவு எடுத்து இந்த பட்ஜெட்டில் வெறும் 1000 ருபாய் ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


6. சென்னை  - கடலூர் வழி மகாபலிபுரம்

          சென்னையிலிருந்து மகாபலிபுரம், புதுச்சேரி வழியாக கடலூர் வரை 179.28 கி.மீ தூரத்துக்கு புதிய பாதை அதைக்க 2008-09 –ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்துக்கு மொத்த திட்ட மதிப்பீடு 2350 கோடிகள் ஆகும். இந்த திட்ட வழித்தடத்தை மாற்றிசெயல்படுத்த புதுச்சேரி அரசு கோரிக்கை வைத்ததின் பலனாகவும் இந்த திட்டத்துக்கு தேவையான நிதியை புதுச்சேரி அரசு ரயில்வேக்கு தயாராக இருப்பதால் இந்த திட்டம் செயல்படுத்த இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பட்ஜெட்டில் வெறும் 1000 ருபாய் ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


7. ஸ்ரீபெரும்புதூர் - கூடவாஞ்சேரி

       சென்னையில் உள்ள ஸ்ரீபெரும்புதூரிலிருந்து ஆவடி, இருங்கட்டுகோட்டை வழியாக கூடவாஞ்சேரிரயில் 60 கிமீ தூரத்துக்கு புதிய பாதை அமைக்கும் திட்டம் 2013-04-ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. ஆவடியிலிருந்து, திருநின்றவூர், திருமழிசை, தண்டலம், இருங்காட்டுகோட்டை, ஸ்ரீPபெரும்புதூர், போந்தூர், ஒரகடம், வழியாக கூடுவாஞ்சேரி வரை, ரயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டது. இத்திட்டத்திற்கு, தமிழக அரசு நிலங்களை, தன்னுடைய பங்காக எடுத்து இலவசமாக தர வேண்டும் என, ரயில்வே நிர்வாகம் தெரிவித்தது. ஆனால், இதுவரை நிலம் கையகப்படுத்தி தரப்படவில்லை. இதனால், இத்திட்டம், பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் வெறும் 1000 ருபாய் ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


8. மொரப்பூர்  - தர்மபுரி

          மொரப்பூரிலிருந்து தர்மபுரிக்கு பழைய பாதையை மீண்டும் கொண்டு வரவேண்டி 36 கி.மீ அகலபாதை அமைக்க 2016-17-ம் ஆண்டு பட்ஜெட்டில் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் மொத்த திட்ட மதிப்பீடு 360கோடிகள் ஆகும். இந்த திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசும் ரயில்வேத்துறையும் இணைந்து கூட்டு நிறுவனம் துவங்கி செயல்படுத்தினால் மட்டுமே ரயில்வேத்துறை மேற்கொண்டு முயற்சிகள் மேற்கொள்ளும் என்று ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. அதுவரை இந்த திட்டம் முடக்கி வைக்கப்படுவதாக ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. இந்த பட்ஜெட்டில் வெறும் 1000 ருபாய் ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


9. ராமேஸ்வரம் - தனுஷ்கோடி

ராமேஸ்வரம் - தனுஷ்கோடி இடையே 17.2 கி.மீ தூரத்துக்கு புதிதாக இருப்புபாதை அமைக்க 2019 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கான மதிப்பு 208 கோடிகள் ஆகும். இந்த பட்ஜெட்டில் 2 கோடியே 70 லட்சங்கள் ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடைபெறும் புதிய இருப்புபாதை பணிகளில் இந்த ஒரு திட்டத்துக்கு மட்டுமே குறைந்தபட்ச வேலைகளுக்கு தேவையான நிதியை ரயில்வேத்துறை ஒதுக்கியுள்ளது.  


10. பெங்களுர் - சத்தியமங்கலம்

         பெங்களுரிலிருந்து மேற்கு தொடர்ச்சி மலையடிவாரம் வழியாக தமிழகத்தில் உள்ள சத்தியமங்கலம் வரை புதிய இருப்புபாதை அமைக்க தென்மேற்கு மண்டலம் சார்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த திட்டம் வனவிலங்குகள் வசிக்கும் பகுதி வழியாக செல்வதால் சுற்றுசூழல் அமைச்சகத்தின் அனுமதி பெற வேண்டிஉள்ளது. தமிழக அரசு சத்தியமங்கலம் வனபகுதியில் சர்வே பணிகளுக்கு அனுமதி மறுத்ததின் காரணமாக பெங்களுர் முதல் சாம்ராஜ்நகர் வரை பாதை அமைக்க கர்நாடகா அனுமதி அளித்து 50 சதமானம் நிதியும் கொடுத்து தேவையான நிலத்தையும் இலவசமாக கொடுத்துள்ளது.  இந்த திட்டத்துக்கு இந்த பட்ஜெட்டில் வெறும் 1000 ருபாய் ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


புதிய திட்டங்கள்:-

          ரயில் பட்ஜெட்டில் தற்போது நடைபெற்றுவருகின்ற திட்ட பணிகளுக்கே நிதிஒதுக்கீடு செய்யாமல் திட்டங்களை முடக்கிவைத்துள்ளனர். இந்த நிலையில் மீண்டும் புதிய இருப்புபாதைகள் அமைக்க கோரிக்கை விடுத்தால் எந்த ஒரு திட்டத்தையும் புதிதாக செயல்படுத்தும் எண்ணம் ரயில்வேத்துறைக்கு இல்லை.

தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, நாமக்கல் மாவட்டம் தவிர மற்ற அனைத்து மாவட்டங்களில் உள்ள ரயில்பாதைகள் ஆங்கிலேயர் காலத்திலே அமைக்கப்பட்டது ஆகும்.


எதிர்பார்க்கப்பட்ட புதிய ரயில் தடம்

  • கன்னியாகுமரி - காரைக்குடி (கிழக்கு கடற்கரை)
  • சங்கரன்கோவில் - திருநெல்வேலி
  • தூத்துக்குடி - திருச்செந்தூர்
  • மதுரை - காரைக்குடி
  • திண்டுக்கல் - காரைக்குடி
  • திண்டுக்கல் - தேனி - சபரிமலை
  • சத்தியமங்கலம் - ஈரோடு - பழனி
  • நாமக்கல் - பெரம்பலூர் - அரியலூர் - தஞ்சாவூர்
     

தனியாக கூட்டு நிறுவனம் அமைக்க கோரிக்கை:

          தமிழத்தில் மற்ற மாநிலங்களை காட்டிலும் அதிக அளவு ரயில்வே திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் மீட்டர் கேஜ் பாதைகளை அகலபாதைகளை மாற்றுதல், ஒருவழிபாதையாக உள்ள பாதைகளை இருவழிபாதையாக மாற்றம் செய்தல், புதிய ரயில்பாதைகளை அமைத்தல், ரயில்பாதைகளை மின்மயமாக மாற்றுதல், புதிய முனைய வசதிகளை ஏற்படுத்துதல், புதிய ரயில்வே தொழிற்சாலைகளை அமைத்தல் ஆகிய முக்கிய திட்டங்கள் போதிய நிதி இல்லாத காரணத்தால் கிடப்பில் போடப்பட்டுள்ளது.  இது போன்ற ரயில்வே திட்டங்களை நிறைவேற்ற மாநில அரசுகளுடன் இணைந்து ஐம்பது சதவிகித நிதியையும் தேவையான நிலத்தை ஆர்ஜிதம் செய்து இலவசமா ரயில்வேதுறைக்கு கொடுத்தால் இந்த திட்டங்கள் விரைவாக நிடைபெறும். மற்ற மாநிலங்கள் ரயில்வே திட்டங்களை நிறைவேற்ற கூட்டு நிறுவகங்களை துவங்கியது போல தமிழகமும் தமிழகத்தில் உள்ள அனைத்து ரயில்வே திட்டங்களை நிறைவேற்ற ரயில்வேத்துறையுடன் இணைந்து கூட்டு நிறுவனத்தை உடனடியாக துவங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேலைவாய்ப்பில் தமிழர்களுக்கு 100 சதவிகிதம் முன்னுரிமை:

        தமிழகம் ரயில்வேத்துறையுடன் இணைந்து கூட்டு நிறுவனம் துவங்கி பணிகளை செய்யும் போது அந்த பணிகளால் உருவாக்கப்படும் ரயில்வே வேலைவாய்ப்பில் 100 சதவிகிதம் தமிழர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட வேண்டும். ரயில்வே திட்டங்களுக்கு தமிழக அரசு ஐம்பது சதவிகித நிதியை கொடுப்பதால் இந்த கூட்டு நிறுவனம் துவங்கும் போது அதில் தமிழக அரசு ரயில்வேதுறையுடன் போடப்படும் ஒப்பந்தத்தில் தமிழர்களுக்கு அதாவது தமிழ் மொழியை ஒரு மொழிபாடமாக படித்தவர்கள் மட்டுமே வேலைவாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும் என்றும் இந்த வேலைவாய்ப்புகளுக்கு என போட்டி தேர்வுகள் நடத்தும் போது தமிழ்மொழியில் கேள்விதாள் இருக்க வேண்டும் என்று  ஒப்பந்தத்தில் ஓர் சரத்து சேர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் தமிழக மக்களால் வைக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் நடைபெறும் புதிய மற்றும் அகல ரயில் பாதை பணிகளுக்கு ஒத்துக்கப்பட்டுள்ள விவரம்