காசு கொஞ்சம் அதிகமாக இருந்தாலும், நெரிசல் இல்லா பயணம், குளுகுளு வசதி, நிமிடத்துல நிலையத்துக்கு வரும் வண்டி என, பயணத்திலேயே பாதி நாட்களை தொலைத்து வந்த சென்னை வாசிகளுக்கு, வரப்பிரசாதமாக வந்திருப்பது தான் மெட்ரோ ரயில் திட்டம்.இந்த திட்டத்தில் முதல் கட்டமாக பணி துவங்கப்பட்ட, சென்னை விமான நிலையம் - வண்ணாரப்பேட்டை, பரங்கிமலை - சென்ட்ரல் வழித்தடத்தில், ரயில் சேவை வெற்றிகரமாக நடந்து வருகிறது.

நாள் ஒன்றுக்கு, ஒரு லட்சம் பேர் பயணிக்கின்றனர்.இதன் விரிவாக்க திட்டத்தில், வண்ணாரப்பேட்டை முதல், திருவொற்றியூர் விம்கோ நகர் வரை, பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. வரும் ஜூனில் இந்த தடத்தில் ரயில் ஓடும் என, அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ஆலோசனை


இந்நிலையில், தங்கள் பகுதி வழியாகவும், மெட்ரோ ரயில் வழித்தடம் வந்துவிடாதா என்பது தான், சென்னைவாசிகளின் ஆவலாக உள்ளது. அதற்கு ஏற்ப, சென்னையை ஒருங்கிணைத்து, மெட்ரோ ரயிலை இயக்கும் வகையில், பல்வேறு புதிய வழித்தடங்கள் தேர்வு செய்யப்பட்டுஉள்ளன.அதற்கு தனித்தனியாக விரிவான அறிக்கையும், மண் பரிசோதனை உள்ளிட்ட பூர்வாங்க பணிகளும் துவங்கப்பட்டுள்ளன. நிதி நிறுவனங்களிடம், திட்டத்தை செயல்படுத்த, நிதி பெறும் முயற்சிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.பல வழித்தடங்கள் தேர்வாகி இருந்தாலும், எந்த வழித்தடத்திற்கு முன்னுரிமை கொடுப்பது என்ற ஆலோசனையிலும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.மெட்ரோ ரயில் இரண்டாவது திட்டத்தில், 69 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், மூன்று வழித்தடங்களில் மாதவரம் - சிறுசேரி சிப்காட் இடையே, 45.8 கி.மீ., கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி பை பாஸ் இடையே, 26.1 கி.மீ., மாதவரம் - சோழிங்கநல்லுார் இடையே, 47 கி.மீ., என, 118.9 கி.மீ., மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது.

மெட்ரோ இரண்டாவது திட்டத்தில், முதல் கட்டமாக, மாதவரம் பால்பண்ணை - சி.எம்.பி.டி., வரை, 16.34 கி.மீ.,யும், மாதவரம் பால்பண்ணை - பெரம்பூர், பட்டாளம், ராயப்பேட்டை, வழியாக, தரமணி வரை, 35.67 கி.மீ., என, மொத்தம், 52.01 கி.மீ., மெட்ரோ பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.இப்பாதை கட்டுமான பணி, ஜூன் மாதம் துவங்கி, 2025ல் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு, 20 ஆயிரத்து, 160 கோடி ரூபாய் நிதி வழங்க, ஜப்பான் பன்னாட்டு நிதி முகமை ஒப்புதல் அளித்துள்ளது.

கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி பை பாஸ் இடையே, 26.1 கி.மீ., பாதை அமைக்க, முதல் கட்டமாக, ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியிடம், 2,306 கோடி ரூபாய் கடன் பெற, மத்திய அரசு விண்ணப்பித்துள்ளது....இரண்டாவது திட்டத்தில், விமான நிலையத்தில் இருந்து, புதிய புறநகர் புதிய பேருந்து நிலையம் அமைய உள்ள கிளாம்பாக்கம் வரை, 15.3 கி.மீ., துாரத்திற்கு மெட்ரோ பாதையை நீட்டிக்கவும், வேளச்சேரியில் இருந்து, பள்ளிக்கரணை வழியாக தாம்பரத்துக்கு மோனோ ரயில் அல்லது மெட்ரோ ரயில் பாதை, 15.5 கி.மீ., அமைப்பது குறித்தும், ஆய்வு செய்ய ஏற்பாடு நடக்கிறது.

மோனோ ரயில்

இது குறித்து, மெட்ரோ ரயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:மெட்ரோ ரயில் இரண்டாவது திட்டத்தில், மாதவரம் - சி.எம்.பி.டி., மாதவரம் - தரமணி இடையே பாதை கட்டுமான பணி துவங்க ஏற்பாடு நடந்து வருகிறது. இரண்டாவது திட்டத்துக்கு, பன்னாட்டு வங்கிகள் கடன் வழங்க முன்வந்துள்ளதால், பணிகளை விரைவாக முடிக்கும் சூழ்நிலை உள்ளது.இத்திட்டத்தில், முதல் கட்டமாக, மாதவரம் - சி.எம்.பி.டி., இடையேயும், விமான நிலையம் - கிளாம்பாக்கம் இடையேயும் பாதை அமைக்கவும், அடுத்ததாக, வேளச்சேரி - தாம்பரம் இடையே ரயில் பாதை அமைக்கலாம் எனவும், கடன் வழங்கும் வங்கிகளின் சார்பில், ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.வட மாநிலங்களில் இருந்து வரும் பஸ்கள், மாதவரத்துடன் நிறுத்தப்படுகின்றன. இப்பயணியர் அங்கிருந்து, சென்னை நகருக்கு, பஸ் அல்லது வாகனங்களில் தான் வர வேண்டியுள்ளது. வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து விமானத்தில் வரும் பயணியர், தாம்பரம், பெருங்களத்துார், கிளாம்பாக்கம் செல்வதற்கு, பஸ் அல்லது வாகனங்களில் தான் செல்ல வேண்டும்.

முக்கியத்துவம்

திரிசூலம் ரயில் நிலையத்தில் இருந்து, கிளாம்பாக்கம் செல்வதற்கு, ஊரப்பாக்கம் வரை மின்சார ரயிலில் சென்று, அங்கிருந்து வாகனத்தில் கிளாம்பாக்கம் செல்ல வேண்டும்.மாதவரத்தில் இருந்து சி.எம்.பி.டி., வரவும், விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் செல்லவும், பயணியரின் வசதியை கருத்தில் கொண்டு, இந்த இரண்டு வழித்தடத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, கட்டுமான பணி துவங்க வேண்டும்.இப்பணி நடக்கும்போது, வேளச்சேரியில் இருந்து, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, மேடவாக்கம், சேலையூர், தாம்பரத்துக்கு, மோனோ ரயில் அல்லது மெட்ரோ ரயில் இயக்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இப்பாதை கட்டுமான பணிகள் முடிந்தால், வடசென்னையில் மாதவரத்தில் இருந்தும், திருவொற்றியூர் விம்கோ நகரிலிருந்தும், தென்சென்னையில் உள்ள கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் இயங்கும். அதிக பயணியர், இந்த சேவையை பயன்படுத்தும் நிலையும் ஏற்படும் என, கடன் வழங்கும் வங்கிகள் ஆலோசனை தெரிவித்துள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.

மேம்பால ரயில் திட்டத்திற்கு குறி!

வேளச்சேரி - தாம்பரம் இடையே, மோனோ ரயில் அல்லது மெட்ரோ ரயில் பாதை அமைக்க ஆலோசிக்கப்பட்டு வருவதால், பரங்கிமலை - வேளச்சேரி - கடற்கரை மேம்பால ரயில் பாதையை, மெட்ரோ நிர்வாகம், தன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள ஆலோசித்து வருகிறது.இப்பாதையை மெட்ரோ நிர்வாகம் எடுத்துக் கொண்டால், பரங்கிமலை - வேளச்சேரி - பூங்கா நகர் மேம்பாலம் வரை, மெட்ரோ பாதையாக மாற்றப்பட்டு, பூங்கா நகர் நிலையத்தில் இருந்து, சென்ட்ரல் மெட்ரோ நிலையம் அல்லது கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து, ஐகோர்ட் மெட்ரோ நிலையத்துடன் இணைக்க முடியும் என, ஆலோசிக்கப்பட்டு வருகிறது.திட்டமிட்டபடி பாதை அமைந்தால், சென்னையில், 40 சதவீதம் பேர் வரை, மெட்ரோ ரயிலில், தினசரி பயணம் செய்யும் நிலை ஏற்படும். பயணியர் வரத்து அதிகரிக்கும் போது, கட்டணத்தை குறைக்கவும், அடுத்தடுத்த திட்டங்களை விரைவாக நிறைவேற்றவும் வாய்ப்பு ஏற்படும்.

ஜூனில் பணிகள் துவக்கம்!

விமான நிலையம் - கிளாம்பாக்கம் இடையே, 15.3 கி.மீ.,யில், 15 நிலையங்கள் அமைய உள்ளன.விமான நிலையம், அருமலை சாவடி, பல்லாவரம், கோதண்டம் நகர், குரோம்பேட்டை, மகாலட்சுமி காலனி, திரு.வி.க. நகர், தாம்பரம், இரும்புலியூர், பீர்க்கன்காரணை, பெருங்களத்துார், ஆர்.எம்.கே. நகர், வண்டலுார், வண்டலுார் உயிரியல் பூங்கா, கிளாம்பாக்கம் ஆகிய இடங்களில் மெட்ரோ ரயில் நிலையம் அமைகிறது.மெட்ரோ இரண்டாம் கட்ட பணி, மாதவரத்தில் இந்த ஆண்டு ஜூனில் துவங்கும் போது, விமான நிலையம் - கிளாம்பாக்கம் பாதை பணி துவங்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.இதனால், இப்பாதை மண் ஆய்வு பணியை மூன்று மாதங்களில் முடிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இப்பாதை முதல் கட்டமாக, தாம்பரம் வரையும், அதன் பின், கிளாம்பாக்கம் வரையும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.மாதவரம் - சி.எம்.பி.டி., மாதவரம் - தரமணி இடையே மெட்ரோ ரயில் புதிய பாதை அமைக்க இம்மாத இறுதி அல்லது மார்ச் முதல் வாரத்தில் உலகளாவிய டெண்டர் கோரப்படவுள்ளது.