பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை சென்ட்ரல் மற்றும் அரக்கோணம் பிரிவில் வரும் 11ம் தேதி இரவு முதல் 12ம் தேதி அதிகாலை 4 மணி வரை பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால், மூர்மார்க்கெட்டில் இருந்து 11ம் தேதி இரவு 11.55 மணிக்கு திருவள்ளூர் நோக்கி புறப்படும் ரயில், கொரட்டூர், பட்டரவாக்கம், திருமுல்லைவாயல், அண்ணனூர், இந்து கல்லூரி, பட்டாபிராம் ஆகிய ரயில் நிலையங்களில் நிற்காது.

இதேபோல், மூர்மார்க்கெட்டில் இருந்து 12ம் தேதி இரவு 12.15 மணிக்கு ஆவடிக்கு புறப்படும் ரயில் கொரட்டூர், பட்டரவாக்கம், திருமுல்லைவாயல், அண்ணனூர் ஆகிய ரயில் நிலையங்களில் நிற்காது. சென்னை கடற்கரையில் இருந்து அரக்கோணத்திற்கு 12ம் தேதி இரவு 1.20 மணிக்கு புறப்படும் ரயில் கொரட்டூர், பட்டரவாக்கம், திருமுல்லைவாயல், அண்ணனூர், இந்து கல்லூரி, பட்டாபிராம் ஆகிய ரயில் நிலையங்களில் நிற்காது.