ரயில் பயணம் எப்பொழுதும் மிக சுவாரஸ்யத்தை கொடுக்கும். நீண்ட தொலைவு ரயில் பயணங்களில் சொகுசாக இயற்கையை ரசித்து கொண்டே பயணம் செய்யலாம்.

சில பயணங்கள் ரயில் செல்லும் மோசமான வழித்தடங்கள் காரணமாக அச்சத்தையும் கொடுக்கும். குறிப்பாக மிக உயரத்தில் எழுப்பப்பட்ட பாலங்கள், மலைசரிவுகள், கடற்கரையோரங்கள் என ரயில் வழித்தடங்கள் பல மிக மோசமாக உள்ளது. இதுபோன்ற மிகமோசமான 10 ரயில் வழித்தடங்களை குறித்து இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம்.

1. குரன்டா செனிக் ரயில்ரோடு, ஆஸ்திரேலியா
- Kuranda Scenic Railroad


Picture courtesy - Australian Tourist Publications

அழகு இருக்கும் இடத்தில்தான் ஆபத்து இருக்கும் என்பது போல அமைந்திருக்கும், இந்த ரயில் பாதை ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தின் கெய்ர்ன்ஸ் நகரிலிருந்து குரந்தா என்ற சிறு நகரத்தை இணைக்கிறது. ஆஸ்திரேலியாவின் பேரன் கார்ஜ் தேசிய பூங்காவை கடந்த 1800ம் ஆண்டுகளிலிருந்து இந்த ரயில் தடம் கடந்து செல்கிறது. நீர்வீழ்ச்சிகள் மலைச்சரிவுகள், செங்குத்தான பாலங்கள் வழியாக செல்லும் போது மனதில் குளிரையும், பயத்தையும் ஒரு சேர வழங்கும்.

2. அர்கோ கேட் ட்ரெயின் ரயில்ரோடு ,இந்தோனேஷியா - Argo Gede Train Railroad

Picture courtesy - Buzzativ

ஜகார்த்தாவிலிருந்து பாண்டூங் என்ற பகுதியை இணைக்கும் ரயில் பாதை மூன்று மணிநேர பயணம் மலையழகை கண்டு ரசிக்கக்கூடிய பயணமாக அமையும். ஆறுகள், பள்ளத்தாக்குகளை கடந்து செல்லும் இந்த ரயில் வழித்தடமும் உலகின் அபாயகரமான ரயில் வழித்தடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த வழித்தடத்தில் ரயில் விபத்துகளும் நடந்துள்ளன.


3. ஒட்டினிக்கா ச்சூ ஜோ ட்ரெயின், தென் ஆப்பிரிக்கா - Outenigua Choo-Tjoe Train

Picture courtesy - Georgeherald.com

1908ல் முதல் சேவையை துவங்கிய ஒட்டினிக்கா ச்சூ ஜோ என்ற ரயில் தென் ஆப்ரிக்காவின் மேற்கு கேப் பகுதியிலுள்ள ஜார்ஜ் மற்றும் நிஸ்னா பகுதிகளை இணைக்கிறது. கடந்த 2009ம் ஆண்டு வரை நீராவி எஞ்சின் மூலம் இயக்கப்பட்டது. 67 கிமீ நீளம் கொண்ட இந்த ரயில் வழித்தடத்தில் தற்போது டீசல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. மிக பழமை வாய்ந்த இந்த ரயில் தடத்தில் உள்ள பாலங்கள் வழியாக செல்லும்போது பயணிகள் ஆபத்தை உணரலாம். குறிப்பாக, காய்மான்ஸ் ஆற்றுப் பாலம் அழகும், ஆபத்தும் நிறைந்ததாக குறிப்பிடப்படுகிறது.


4. ஜார்ஜ் டவுன் லூப் ரயில்ரோடு , கொலராடோ, அமெரிக்கா - Georgetown Loop Railroad

Picture courtesy - unsualplaces.org

கொலராடோவிலுள்ள அன்டோனிட்டோ மற்றும் நியூ மெக்சிகோவிலுள்ள சாமா நகரங்களுக்கு இடையிலான ரயில் வழித்தடமும் மிகவும் ஆபத்தானதான வழித்தடமாகும். 19 ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வெள்ளி சுரங்கங்களை சென்றடைய இந்த தடம் அமைக்கப்பட்டது. அமெரிக்காவின் மிக நீளமான குறுகிய ரயில் பாதையாக இந்த தடம் விளங்குகிறது. குகைகள், செங்குத்து பாலங்கள் வழியாக கடந்து செல்லும்போது பயணிகளை பரவசப்படுத்தும் இந்த தடம், 100 அடி உயரமான டெவில்’ஸ் கேட் ஹை பாலத்தில் மெதுவாக செல்லும் பொழுது பயணிகளிடையே சற்று அச்சத்தையும் ஏற்படுகிறது.


5. ட்ரென் எ லாஸ் ந்யூப்ஸ், அர்ஜென்டினா - Tren a las Nubes

Picture courtesy - stalkeando.com

வடமத்திய அர்ஜென்டினாவிலுள்ள சால்டாவிலிருந்து சிலி நாட்டு எல்லையிலுள்ள லா போல்வொரில்லாவை இணைக்கும் இந்த ரயில் வழித்தடம் அமைக்கும் பணிகள் 1921ல் இருந்து 1948 வரை நடந்தது. 21 குகைகள், 13 சிலிர்ப்பூட்டும் பாலங்கள் வழியாக செல்லும் இந்த வழித்தடமும் சிலிர்க்க வைக்கும் அனுபவத்தை வழங்கும் என்பதோடு, ஆபத்துக்களும் நிறைந்ததாக உள்ளது.


6. டெவில்’ஸ் நோஸ் ட்ரெயின், ஈக்வடார் - Devil’s Nose Train

Picture courtesy - Viator.com

நரிஸ் டெல் டையப்லோ அல்லது டெவில்’ஸ் நோஸ் ட்ரீன், கடல் மட்டத்திலிருந்து 9,000 அடி உயரத்தில் ஆண்டிஸ் மலைகள் மீது செல்கிறது. உயரமான மலையை சுற்றி செங்குத்தாக செல்வதால் விபத்துக்கள் நேரும் என்பதால் 5 க்கும் குறைவான பெட்டிகளே பயன்படுத்தப்படுகிறது. உலகின் மிகவும் சவாலான பயணங்களில் இதுவும் ஒன்றாகும் திரில்லான பயணங்களை மேற்கொள்வோர் அதிகம் இங்கு வந்து செல்கின்றனர். வளைந்து வளைந்து மலையை ஏறுவதை அனுபவிக்க இங்கு நீங்கள் ஒருமுறையேனும் செல்ல வேண்டும்.

7. தி டெத் ரயில்வே, தாய்லாந்து - The Death Railway, Thailand

Picture courtesy - 123rf.com

மரண ரயில் பாதை என அழைக்கப்படும் இந்த பர்மா ரயில்பாதை சுமார் 415 கிலோமீட்டர்கள் கொண்டது. இது அடர்ந்த காடுகள் மற்றும் ஆபத்தான மலைகளின் விளிம்புகளில் செல்லும் ஆபத்து நிறைந்த பயணத்தை கொண்டது. சயாம் மரண ரயில் பாதையில் மிகவும் புகழ்பெற்றது, 277 ஆவது பாலம் என்று அழைக்கப்படும் குவாய் ஆற்றுப்பாலமாகும். இந்த திகில் நிறைந்த பயண அனுபவத்தை ரசிக்க பலரும் விரும்புகின்றனர்.


8. அசோ மினாமி, ஜப்பான் - Aso Minami, Japan

Picture courtesy - Nav bharat times

எரிமலைகள் சூழ்ந்த பகுதிகள் வழியாக செல்லும் மிக ஆபத்தான ஜப்பானிய வழித்தடமாக இது உள்ளது. இங்கு எப்போது வேண்டுமானாலும் பெரிய அளவில் வெடித்து ஆபத்தை ஏற்படுத்த கூடிய எரிமலைகள் உள்ளது . கூடவே மிகவும் இயற்கை சூழ்ந்த இடமாகவும் உள்ளது இது சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த வழித்தடமாக உள்ளது.

9. வொயிட் பாஸ் அண்ட் யூகன் ரூட், அலாஸ்கா, அமெரிக்கா - White Pass and Yukon Route, Alaska, USA

Picture courtesy - stuff.co.nz

தங்கம் எடுப்பதற்காக 1892ம் ஆண்டு இந்த ரயில்பாதை தொடங்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் தற்பொழுது இது சுற்றுலாத்தலமாக மாறியுள்ளது. பாறைகளை ஒட்டி பயணம் செய்யும் இந்த ரயில், சுற்றுலா பயணிகளை அதிகம் கவரும் ஒரு இடமாக உள்ளது. மிகவும் ஆபத்தான ஒரு ரயில் பயணமாக இருந்தாலும் ரயிலில் பயணம் செய்து கொண்டே இயற்கையை கண்டுகளிக்க பல சுற்றுலாப்பயணிகள் இங்கு வருகின்றனர்.

10. பாம்பன் ரயில் பாலம், ராமேஸ்வரம், இந்தியா - Pamban sea bridge, India

Picture courtesy - Tripoto.com


உலகின்ஆபத்தான ரயில்பாதைகளில் ராமேஸ்வரம் பாம்பன் ரயில் பாலமும் ஒன்றாக குறிப்பிடப்படுகிறது. இயற்கை சீற்றங்களால் அதிக ஆபத்துக்கள் உள்ள இந்த ரயில் வழித்தடமும் ஆன்மிக சுற்றுலா மற்றும் வெளிநாட்டினரை கவர்ந்த ரயில் வழித்தடமாக உள்ளது. பலமான காற்று வீச்சு, கடல் அலைகளின் ஆபத்துக்களை கடந்து ரயில் செல்லும்போது பயணிகளுக்கு நெஞ்சில் அச்சத்தை ஏற்படுத்துவதை தவிர்க்க முடியாது. தற்போது இந்த பாலம் அருகில் மற்றொரு ரயில் பாலமும் கட்டப்பட்டு வருகிறது.

Recent Posts Widget