திருவாரூர் ரயில் நிலையத்தில் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் ஆய்வு
திருவாரூர் ரயில் நிலையத்தை இன்று(ஜன 22) திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அஜய்குமார் ஆய்வு செய்தார். அப்போது நடைமேடைகளையும் பயணிகளின் தேவைகளையும் கேட்டறிந்தார். மேலும் ரயில் நிலையத்தில் உள்ள பாதுகாப்பு குறித்தும்  திருவாரூர் ரயில் நிலையத்தின் வருவாய் அதிகரிப்பதற்கான வழிகளையும் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார்.

இதனை தொடர்ந்து திருவாரூர் மாவட்ட ரயில் உபயோகிப்போர் சங்க தலைவர் தணிகாசலம், செயலர் பேராசிரியர் பாஸ்கரன், இணைச் செயலாளர் அக்பர் பாட்சா, நிர்வாகிகள் துளசிதாஸ், இலியாஸ், ஹேமந்த், சத்தியன் ஆகியோர் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

அதில் திருவாரூரிலிருந்து அதிகாலையில் தஞ்சை திருச்சி வழியாக மதுரைக்கு ரயில் இயக்கவும் மாலையில் 6 மணிக்கு பிறகு திருச்சியிலிருந்து திருவாரூருக்கு ரயில் இயக்கவும், சென்னையிலிருந்து திருவாரூர் - பட்டுக்கோட்டை - காரைக்குடி வழியாக ராமேஸ்வரத்துக்கு ரயில்கள் இயக்கவும் விழுப்புரத்திலிருந்து மயிலாடுதுறை வரை வரும் ரயில்களை திருவாரூர் வரை நீட்டிக்கவும் கோரப்பட்டு இருந்தது.

மேலும் திருவாரூரில் அனைத்து ரயில்களுக்குமான முதன்மை பணிமனை அமைக்கவும், திருவாரூர் நடைமேடை 2&3 உயரம் அதிகரிக்கவும், பண்டிகை காலங்களில் சிறப்பு ரயில்கள் திருவாரூருக்கு இயக்கவும், பயணிகளுக்கு அனைத்து நடை மேடைகளிலும் கழிவறை வசதியும், கூரையுடன் கூடிய அதிக இருக்கை வசதிகளை மேற்கொள்ள ஆவண செய்ய கோரியிருந்தனர்.

இவை அனைத்தையும் கவனத்துடன் படித்துப் பார்த்த கோட்ட மேலாளர் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து விட்டு இயன்றதை நிறைவேற்றித் தருவதாகவும், மார்ச் மாதம் முதல் தஞ்சாவூர் - திருவாரூர் மின்சார ரயில் இயக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.

பின்னர் ரயில் நிலையத்திற்கு வெளியே உள்ள கட்டிடங்களையும் எதிர்கால திட்டங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது கோட்ட வணிக மேலாளர் நரேன், இயக்க மேலாளர் பூபதி ராஜா மற்றும் நிலைய மேலாளர் ரவி ஆகியோர் உடனிருந்தனர்.

புகைப்படம் - துளசிதாஸ் திருவாரூர்

தஞ்சாவூர் - திருவாரூர் இடையே ஜனவரி 31ம் தேதி புதிதாக அமைக்கப்பட்ட மின்சார பாதையை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்யவுள்ளார்.