தமிழகத்தின் 5 முக்கிய ஒற்றை வழி ரயில் பாதைகளை இரட்டை வழி பாதையாக மாற்ற இறுதி நில ஆய்வு பணிக்கு நிதி ஒதுக்கீடு


தமிழகத்தில் தற்போது சென்னை முதல் மதுரை மற்றும் கோவை வரை இரட்டை ரயில் பாதைகள் பயன்பாட்டில் உள்ளன.

இதற்கிடையில் தென்மாவட்டங்களில் ஒரு வழிப்பாதையால் பயணிகள் ரயில்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் குறித்த நேரத்தில் இடங்களை அடைய முடியாமல், பல்வேறு ரயில் நிலையத்திலும் பல மணி நேரம் காத்துக்கிடக்கும் சூழல் இன்றும் தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில், தென்மாவட்டங்களில் இரட்டை ரயில்பாதை உருவாக்கும் வகையில் மதுரை-மணியாச்சி-நாகர்கோவில், மணியாச்சி-தூத்துக்குடி, கன்னியாகுமரி-திருவனந்தபுரம் என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன.  இதில் மதுரை-நாகர்கோவில் வரை பாதை அமைக்க ரூ.1,700 கோடியும், கன்னியாகுமரி-திருவனந்தபுரம் பாதைக்கு ரூ.900 கோடியும் செலவாகும் எனக் கணக்கிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் முக்கிய ஒற்றை வழி ரயில் பாதைகளை இரட்டை பாதையாக மாற்ற இறுதிக்கட்ட நில ஆய்வு மேற்கொள்ளும் பணிக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு ;

1. ஓசூர் - தர்மபுரி - பெங்களூர் (147 கிலோமீட்டர்)
தமிழகத்தில் இருந்து கர்நாடக மாநிலம் செல்ல முக்கிய தடமாக விளங்கும் இதில் கூடுதல் ரயில்கள் இயக்க முடியவில்லை. இரட்டை வழி பாதை கூடுதல் ரயில்கள் இயக்க வாய்ப்பளிக்கும். இந்த தடத்தில் இறுதிக்கட்ட நில ஆய்விற்கு ரூ. 1 கோடியே 83 லட்சத்தி 75 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2. சேலம் - நாமக்கல் - கரூர் - திண்டுக்கல் (160 கிலோமீட்டர்)
தற்போது தென்மாவட்டங்களை இந்தியாவின் பல்வேறு பகுதிகளுடன் இணைக்கும் வகையில் மாற்று தடமாக இந்த தடம் அமைந்துள்ளது. இந்த தடத்தில் இறுதிக்கட்ட நில ஆய்விற்கு ரூ. 2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

3. ஈரோடு - கொடுமுடி - கரூர் (65 கிலோமீட்டர்)
இந்த தடத்தில் இறுதிக்கட்ட நில ஆய்விற்கு ரூ. 81 லட்சத்தி 25 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

4. விழுப்புரம் - திருவண்ணாமலை - வேலூர் - காட்பாடி (160.10 கிலோமீட்டர்)
இந்த தடத்தில் இறுதிக்கட்ட நில ஆய்விற்கு ரூ. 2 கோடி 13 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தடத்தில் போதிய அளவில் ரயில் சேவை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இரட்டை பாதை கூடுதல் ரயில்கள் பெற்று தருமா ?

5. சென்னை கடற்கரை - சென்னை எழும்பூர் (4.3 கிலோமீட்டர்)
புறநகர் ரயில்கள் இயக்க பிரத்யேக இரட்டை பாதை தற்போது உள்ளது. இதர விரைவு மற்றும் சரக்கு ரயில்கள் ஒற்றை பாதையில் இயங்கி வருகிறது. இரட்டை பாதை அமையும் வண்ணத்தில் சென்னை எழும்பூரில் இருந்து வடக்கே செல்லும் ரயில்களின் காத்திருக்கும் நேரம் குறைய வாய்ப்புள்ளது. இந்த தடத்தில் இறுதிக்கட்ட நில ஆய்விற்கு ரூ. 5 லட்சத்தி 38 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து விழுப்புரம் - கும்பகோணம் - மயிலாடுதுறை - தஞ்சாவூர், கரூர் - குளித்தலை - திருச்சி மற்றும் தஞ்சாவூர் - திருவாரூர் - காரைக்கால் ரயில் தடங்கள் இரட்டை பாதையாக மாற்ற வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


புதியது பழையவை