ரயில்வே பாதைகளை சுத்தம் செய்யும் பணியை ரயில்வே அமைச்சகம் மூன்றாம் நபர்களிடம் ஒப்படைத்ததாகவும், அவர்கள் அந்த கழிவுகளை சுத்தம் செய்ய மனிதர்களை தொடர்ந்து பயன்படுத்துவதாகவும் மக்களவையில் பேசிய  தி.மு.க. எம்.பி., கனிமொழி தெரிவித்தார். இந்த நிலை தொடர்வது வெட்கக் கேடானது என தெரிவித்தார்.

இதற்கு பொறுப்பேற்பதுடன், ரயில்வே துறை மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்து பேசிய ரயில்வே அமைச்சர் பியூஸ்கோயல், பா.ஜ.க. ஆட்சிக் காலத்தில்,  ரயில்களில் பயோ டாய்லெட் உருவாக்கப்பட்டு, மனித கழிவுகள் ரயில்வே பாதைகளில் விழாமல் இருப்பது உறுதி செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

மேலும், 2014-ஆம் ஆண்டிற்கு முன்பு வரை இருந்ததற்கு  நாங்கள் என்ன செய்ய முடியும் என மறைமுகமாக காங்கிரஸ் கட்சியை சாடியுள்ளார்.

இதே போல மக்களவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய தயாநிதி மாறன், சென்னை புறநகரில் உள்ள பெரும்பாலான ரயில் நிலையங்களில் கழிவறை வசதி இல்லை என தெரிவித்தார். மேலும் சுமார் இரண்டு மணி நேரம் வரை செல்லும் புறநகர் ரயில்களிலும் கழிவறை வசதி இல்லாததால் மக்கள் மிகவும் சிரமப்படுவதாக அவர் குற்றம்சாட்டினார். 

கடந்த 2014-ம் ஆண்டு முதல் பாஜகதான் ஆட்சியில் இருப்பதாகவும், இந்த விவகாரத்தில் காங்கிரஸ் அரசை குற்றம் சொல்ல முடியாது என்றும் விமர்சித்தார்.

இதற்கு பதிலளித்து பேசிய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் சென்னபாசப்பா, புறநகர் ரயில் நிலையங்கள் அனைத்திலும் கழிவறைகள் அமைக்க சாத்தியமில்லை என தெரிவித்துள்ளார்.