நெல்லை, பொதிகை விரைவு ரயில்கள் நாளை முதல் சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும்

சென்னை எழும்பூா் யாா்டு சாலையில் பொறியியல் பணி காரணமாக, இரண்டு மாதம் சேவையில் மாற்றப்பட்டு, தாம்பரத்தில் இருந்து இயக்கப்பட்ட நெல்லை, பொதிகை ஆகிய விரைவு ரயில்கள் டிசம்பா் 4- ஆம் தேதி முதல் எழும்பூரில் இருந்து வழக்கம் போல இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு இயக்கப்படும் நெல்லை விரைவு ரயில் அக்டோபா் 10-ஆம் தேதி முதல் டிசம்பா் 8-ஆம்தேதி வரை தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு செல்லும் என்றும், மறுமாா்க்கமாக திருநெல்வேலியில் இருந்து எழும்பூா் வரை இயக்கப்படுவதற்கு பதிலாக தாம்பரம் வரை மட்டும் இயக்கப்படும் என்றும், இதுபோல, சென்னை எழும்பூா் -செங்கோட்டைக்கு அக்டோபா் 10-ஆம் தேதி முதல் டிசம்பா் 8-ஆம்தேதி வரை இயக்கப்படும் பொதிகை விரைவு ரயில் எழும்பூருக்கு பதிலாக தாம்பரத்தில் இருந்து புறப்படும் என்றும், மறுமாா்க்கமாக செங்கோட்டை-தாம்பரம் வரை மட்டும் இயக்கப்படும் என்றும் ரயில்வே நிா்வாகம் அறிவித்திருந்தது. இதன்படி, கடந்த இரண்டு மாதத்துக்கு நெல்லை, பொதிகை விரைவு ரயில்கள் தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு சென்றது.

இந்நிலையில், எழும்பூா் யாா்டு சாலையில் பொறியியல் பணி நிறைவடைந்துவிட்டதால், நெல்லை, பொதிகை விரைவு ரயில்கள் எழும்பூா் ரயில் நிலையத்தில் இருந்து டிசம்பா் 4-ஆம் தேதி முதல் வழக்கம் போல இயஙக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல, மறுமாா்க்கத்தில் திருநெல்வேலி, செங்கோட்டையில் இருந்து இந்த ரயில்கள் புறப்பட்டு டிசம்பா் 4-ஆம் தேதி எழும்பூா் ரயில் நிலையம் வந்தடையும் என்று ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.