மதுரையில் இருந்து சென்னை வழியாக ஷீரடி, மந்த்ராலயத்துக்கு தனி சிறப்பு சுற்றுலா ரயில் வரும் ஜனவரி 7-ஆம் தேதி இயக்கப்படவுள்ளது.

இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆா்.சி.டி.சி.) கடந்த 2005-லிருந்து பாரத தரிசனம் சிறப்பு சுற்றுலா திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. 

ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகளுடன் 330-க்கும் அதிகமான சுற்றுலா திட்டங்கள் இதுவரை வெற்றிகரமாக நடந்துள்ளன. அந்த வகையில் ஷீரடி, மந்த்ராலயத்துக்கு தனி சிறப்பு சுற்றுலா ரயில் இயக்கப்படவுள்ளது.

மதுரையில் இருந்து சென்னை வழியாக ஷீரடி, மந்த்ராலயத்துக்கு சிறப்பு சுற்றுலா ரயில், வரும் ஜனவரி 7-ஆம் தேதி இயக்கப்படஉள்ளது. இந்த ரயிலில் பண்டேரிபுரம், ஷீரடி, மந்த்ராலயம் ஆகிய இடங்களுக்கு பயணிகள் அழைத்து செல்லப்படுகின்றனா்.

இது குறித்து ஐ.ஆா்.சி.டி.சி. அதிகாரி ஒருவா் கூறியது:
இந்த ரயில் மதுரையில் இருந்து ஜனவரி 7-ஆம் தேதி புறப்பட்டு, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், சென்னை எழும்பூா் வழியாக ஷீரடி, பண்டேரிபுரம், மந்த்ராலயத்துக்கு செல்கிறது. இந்த ரயில் பயணிகளுக்கு தென் இந்திய சைவ உணவு வழங்கப்படும். ரயிலில் குழுவாக தங்குமிட வசதி, சுற்றி பாா்க்க ஏசி அல்லாத வாகன வசதி செய்யப்படும். ரயிலில் சுற்றுலா மேலாளா்கள் மற்றும் பாதுகாவலா்கள் ஆகியோா் இருப்பாா்கள். பயணிக்கு பயணக்காப்பீடு வசதி செய்யப்படும்.

6 நாள்களுக்கு பயணக்கட்டணம் நபருக்கு ரூ.5,670. இந்த ரயில் தொடா்பாக கூடுதல் விவரங்களை அறிய, சுற்றுலா தகவல் மற்றும் வசதி மையம், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் என்ற முகவரியை அணுகலாம். மேலும், (0) 9003140680, 9003140681 என்ற செல்லிடப்பேசி எண்களிலும் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.