தெற்கு ரயில்வேயில் முதல் முறையாக பார்வையற்றோர் பயன்பெற ஏதுவாக, பிரெயிலி எழுத்து வடிவம் கொண்ட ரயில் நிலைய வரைபடம்


  பார்வையற்ற ரயில் பயணிகளுக்கு பயணம் இனிதாகும்!வழிகாட்டுகிறது 'பிரெய்லி மேப்!'


ரயில் பயணம் மேற்கொள்ளும் பார்வையற்றோர் அனுபவிக்கும் சிரமங்களை, நம்மில் எத்தனை பேர் நினைத்துப்பார்த்திருப்போம்...? அவர்கள் அனுபவிக்கும் சிரமங்களை, கண்முன் பார்த்த நம் தென்னக ரயில்வே, சும்மா வேடிக்கை பார்க்கவில்லை. கோவை ரயில்வே ஸ்டேஷனில், புதிதாக 'பிரெய்லி மேப்' பலகைகள் நிறுவியுள்ளது.

தெற்கு ரயில்வேயில் இது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.சேலம் ரயில்வே கோட்டத்தின் கீழ் கோவை, திருப்பூர், சேலம் உட்பட, 74 ஸ்டேஷன்கள் உள்ளன. பயணிகள் எளிதில் டிக்கெட் பெறவும், வசதிகளை பெறவும் ஏதுவாக, புதிய மொபைல்போன் செயலிகள், உதவி அழைப்பு எண்கள் உள்ளிட்ட நவீன அம்சங்கள், அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.வருவாயை மட்டுமே இலக்காக கொள்ளாமல், பயணிகள் பாதுகாப்பிலும் ரயில்வே நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது. சேலம் கோட்டத்தில் ஏ1 அந்தஸ்து பெற்ற கோவை ஸ்டேஷனில் லிப்ட், எஸ்கலேட்டர், .சி., வசதியுடன் தங்கும் அறை... என, பல்வேறு கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

மாற்றுத்திறனாளிகள், முதியோர், நோயாளிகள் ஸ்டேஷன் வளாகத்தில் இருந்து நடைமேடைகள் செல்ல ஏதுவாக, 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான, சாய்தள மேடை சமீபத்தில் பயன்பாட்டுக்கு வந்தது.புது திட்டம்இப்படி என்னதான் வசதிகள் இருந்தாலும், ரயிலை பிடிக்க அலைமோதும் பயணிகள் மத்தியில், பார்வையற்ற பயணிகள் பிறரது உதவியைதான் நாடவேண்டியுள்ளது.எனவே, பார்வையற்றோருக்கு உதவும் 'பிரெயிலி' எழுத்துவடிவம் கொண்ட பலகைகள் நிறுவ திட்டமிடப்பட்டது.

சேலம் கோட்டம் துவங்கிய நாளான நேற்று, ஸ்டேஷன் நுழைவாயில், குடிநீர் குடிக்கும் இடம், டிக்கெட் கவுன்டர் அருகே என, பல்வேறு இடங்களில் பிரெயிலி எழுத்துவடிவ வழிகாட்டு பலகைகள் பொருத்தப்பட்டன.ஸ்டேஷன் தகவல் மையம், டிக்கெட் கவுன்டர், ஸ்டேஷன் மாஸ்டர், இயக்குனர் அலுவலகங்கள், ஆர்.பி.எப்., வீரர் அலுவலகம் என ஸ்டேஷன் வரைபடம் இப்பலகையில் இடம்பெற்றிருப்பதால், பார்வையற்றோர் இவற்றை பயன்படுத்தி, இனி பதட்டம் இன்றி பயணிக்கலாம்.

''தெற்கு ரயில்வேயில்இது முதல் முறை"

கோவை ரயில்வே ஸ்டேஷன் இயக்குனர் சதீஷ் சரவணன் கூறுகையில், ''தெற்கு ரயில்வேயில் முதல் முறையாக பார்வையற்றோர் பயன்பெற ஏதுவாக, பிரெயிலி எழுத்து வடிவம் கொண்ட ஸ்டேஷன் வரைபடம் பொருத்தப்பட்டுள்ளது. அதனை தடவிப்பார்த்து ஸ்டேஷனில் வேண்டிய இடங்களுக்கு, பார்வையற்றோர் செல்லமுடியும்,'' என்றார்.

Dinamalar - No 1 Tamil News Paper

புதியது பழையவை