வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டப்பணி தற்போதைய நிலை என்ன ?


பறக்கும் ரயில் திட்டம் முதல் கட்டமாக கடற்கரையில் இருந்து மயிலாப்பூர் வரை இயக்கப்பட்டது. பின்னர் வேளச்சேரி வரை நீட்டிக்கப்பட்டது. வேளச்சேரி வரை பறக்கும் ரயில் திட்டம் நீட்டிக்கப்பட்டதால், பயணிகளிடம் இந்த ரயிலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆரம்பத்தில் 6 பெட்டிகள் கொண்ட ரயில் இயக்கப்பட்டது. பயணிகள் வரவேற்பை தொடர்ந்து தற்போது 9 பெட்டிகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பயணிகள் வரவேற்பை தொடர்ந்து, கடற்கரை - வேளச்சேரி வரை இயக்கப்பட்ட பறக்கும் ரயிலை, பரங்கிமலை வரை 3 கி.மீ. தூரத்துக்கு நீட்டிக்க தெற்கு ரயில்வே முடிவு செய்தது. அதன்படி, வேளச்சேரி அடுத்து புழுதிவாக்கம், ஆதம்பாக்கம், பரங்கிமலை ஆகிய இடங்களில் ரயில் நிலையம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு 2007ம் ஆண்டு பணிகளும் தொடங்கியது. பணிகள் தொடங்கி, தற்போது 11 ஆண்டுகள் ஆகி விட்டது. 

ஆனாலும், வேளச்சேரியில் இருந்து பரங்கிமலை வரை இன்னும் பறக்கும் ரயில் சேவை தொடங்கப்படவில்லை. வேளச்சேரி - புழுதிவாக்கம், ஆதம்பாக்கம் வரை ரயில் தண்டவாளம் அமைக்கும் பணிகள் முடிவடைந்து தயார் நிலையில் உள்ளது. ஆனால் ஆதம்பாக்கம் - பரங்கிமலை இடையே சுமார் 500 மீட்டர் தூரம் ரயில் பாதை அமைக்கப்படாமல் 11 ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.

இதில் 500 மீட்டர் நீள ரயில் பாதை, நீதிமன்ற வழக்கு உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களால் சுமார் 10 ஆண்டுகளாக தாமதமாகி வருகிறது. சமீபத்தில் நீதிமன்ற வழக்கும் முடிந்துவிட்ட நிலையில் வேளச்சேரி - பரங்கிமலை வழித்தடப் பணிகளை துரிதப்படுத்தும்படி மத்திய அமைச்சர் பியுஷ் கோயலிடம் தென் சென்னை மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் கோரிக்கை மனு அளித்திருந்தார்.


சமீபத்தில் பேட்டியளித்த தமிழச்சி தங்கபாண்டியன் "வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டப்பணி  18 மாதங்களில் முடிக்கப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் உறுதியளித்துள்ளார்" என கூறி இருந்தார்.

இந்நிலையில் வேளச்சேரி - பரங்கிமலை இடையே சில பணிகளுக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது. அதில் பணியின் காலம் 15 மாதங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.


புழுதிவாக்கம் ரயில் நிலையம் 

ஆதம்பாக்கம் ரயில் நிலையம்

இதர புகைப்படம்புதியது பழையவை