பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் 'ராஜராஜன்' கிரேன் மக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தும் பணிகளில் ரயில்வே நிர்வாகம் ஈடுபட்டுள்ளது


 'ராஜராஜன்' கிரேனை காட்சிப்படுத்த வரலாற்று சின்னம்!

பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில், கேட்பாரற்று புதரில் புதைந்து கிடந்த, நீராவி இன்ஜினில் இயங்கிய 'ராஜராஜன்' கிரேன் மீட்கப்பட்டு, மக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்த ஸ்டேஷன், முகப்பு பகுதியில் நிறுத்தும் பணிகளில் ரயில்வே நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. கோவை ரயில்வே ஸ்டேஷன் முகப்பில், பழங்கால நீராவி இஞ்சின் மக்கள் பார்வைக்காக காட்சிபடுத்தப்பட்டுள்ளது.

உள்ளூர் வெளியூர் மக்களும், மாணவர்களும் ரயில் இன்ஜினை தினமும் கண்டு வியக்கின்றனர்.அதேபோல, பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில், மீட்டர் கேஜ் ரயில்பாதை அமைக்கும் பணி, தொடர்ந்து தடம் மாறும் ரயில் இன்ஜின் மற்றும் பெட்டிளை துாக்கி, மீண்டும் ரயில் தண்டவாளத்தில் நிலை நிறுத்தவும் ராட்சத கிரேன்கள் ஈடுபடுத்தப்பட்டன.

கடந்த, 1975ல் மதுரை கோட்டம் பொள்ளாச்சிக்கு 'ராஜராஜன்' என பெயரிடப்பட்ட, நீராவி இன்ஜினில் இயங்கும் கிரேனை வழங்கியது. இக்கிரேன், 150 ஆண்டுகளுக்கு முன் தயாரிக்கப்பட்டது.இந்த கிரேன், 50 டன் எடையை துாக்கக்கூடியது. பல்வேறு மீட்பு பணிகளில் பெரிதும் பயன்பட்டது. கடந்த, 2009ம் ஆண்டு அகல ரயில் பாதை பணிகளால், 'ராஜராஜன்' செயல்பாடுகள் முடங்கி வீணாகி புதருக்குள் மூழ்கியது. சமீபத்தில் பொள்ளாச்சிக்கு வந்த பாலக்காடு கோட்ட ரயில்வே மேலாளர் பிராதாப்சிங் ஷாமி, கிரேன்கள் புதுப்பிக்கப்பட்டு, காட்சிப்படுத்தப்படும் என, உறுதி தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன், பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷன் முகப்பு பகுதியில், மேடை, தண்டவாளம் அமைத்து, 'ராஜராஜன்' கிரேனை நிறுவும் பணிகள் துவங்கியது. திருச்சி மலைக்கோட்டை ரயில்வே பணிமனையில் இருந்து, 10க்கும் மேற்பட்ட ஊழியர்கள், பொள்ளாச்சி வந்து, மண்ணில் வீழ்ந்து கிடந்த கிரேன்களை பழுது பார்த்து, பராமரிப்பு மேற்கொண்டனர். கிரேனின் பாகங்களை கழற்றி, நீண்ட கனரக வாகனங்களில் ஏற்றி, ரயில்வே ஸ்டேஷன் வளாகத்துக்கு கொண்டு வரும் பணியில் ஈடுபட்டனர்.

ஒட்டு மொத்த கிரேனின் பாகங்கள் வந்து சேர்ந்தவுடன், ஸ்டேஷன் முகப்பு பகுதியில் அமைக்கப்பட்ட மேடையில், தண்டவாளத்தில் நிறுத்தி காட்சி படுத்தப்படுகிறது.ரயில்வே ஊழியர்கள் கூறுகையில், 'டிச.,13ம் தேதி இந்திய ரயில்வே பொதுமேலாளர் பொள்ளாச்சியில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். இதற்காக, பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனின் பழமையை, பெருமை படுத்துவதற்காக, பழங்கால கிரேனை காட்சிப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமேலாளர் ஆய்வின் போது, ராஜராஜன் கிரேன் மக்கள் பார்வைக்கு திறக்கப்படும்,' என்றனர்.

Dinamalar


புதியது பழையவை