பாம்பனில் ரூ.250 கோடியில் புதிய ரயில்வே பாலப் பணிகள் - பூமி பூஜையுடன் தொடங்கியதுImage result for பாம்பனில்"
ராமேஸ்வரம் அருகே பாம்பனில் புதிய ரயில்வே பாலம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்று இன்று முதல் பணிகள் துவங்கப்பட உள்ளன. மண்டபம் நிலப்பகுதியையும் ராமேஸ்வரம் தீவு பகுதியையும் இணைக்கும் விதமாக கடந்த 1914ம் ஆண்டு பாம்பன் கடல் நடுவே சுமார் 2 கி.மீ தூரத்திற்கு ரயில் பாலம் அமைக்கப்பட்டது. இந்த பாலம் சுமார் 105 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது.
இந்த பாலம் தற்போது வலுவாக இருந்தாலும் இந்திய ரயில்வே சார்பில் புதிய ரயில் பாலம் கட்டுவதற்கு 2018ம் ஆண்டு நிதி ஒதுக்கப்பட்டது. புதிய ரயில் பாலம் அமைக்கும் பணிக்காக ரூ.250 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
இதையடுத்து, புதிய பாம்பன் பாலம் அமைக்க சென்னை ஐஐடி மாணவர்கள் மற்றும் ரயில்வே பொறியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்நிலையில் இன்று காலை 10 மணியளவில் அடிக்கல் நாட்டி, பூமி பூஜையானது நடைபெற்றது. இந்த பூஜையின் போது இந்திய ரயில்வேயின் ஆய்வு குழுவினர் மற்றும் முதன்மை பொறியாளரும், தனியார் கட்டுமான அதிகாரிகளும் பூஜையில் கலந்து கொண்டனர். பூஜையை தொடர்ந்து பாலம் கட்டும் பணிகள் தொடங்கியது.

தற்போதைய ரயில் பாலத்திலிருந்து 30 மீட்டர் முதல் 50 மீட்டர் வரையிலான தூரத்தில் புதிய பாலம் கட்டப்பட உள்ளது.

2 கி.மீ தூரத்திற்குக் கடலின் இடையே 99 தூண்கள் கடல் மட்டத்திலிருந்து 6 மீட்டர் உயரத்தில் எழுப்பப்பட உள்ளது.

இந்தத் தூண்கள் இடையே 60 அடி நீளம் கொண்ட 101 இணைப்பு கர்டர்கள் பொறுத்தப்பட உள்ளன.

தற்போது உள்ள தூக்குப் பாலத்திற்குப் பதிலாக நவீன வசதிகளுடன் கூடிய ஹைட்ராலிக் வகையிலான தூக்குப் பாலமும் இதில் அமைகிறது.

சுமார் 22 மீட்டர் உயரம் கொண்ட இந்தத் தூக்குப் பாலத்தின் வழியாக பெரிய மீன்பிடிப் படகுகள், கப்பல்கள் ஆகியன செல்ல முடியும்.

இந்தத் தூக்குப் பாலம் மின்சாரம், ஜெனரேட்டர் மற்றும் மனித சக்தி என 3 முறைகளிலும் திறக்கும் வகையில் உருவாக்கப்பட உள்ளது.

இந்தப் பாலத்தின் பணிகள் இரண்டு ஆண்டுகளில் நிறைவு பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.