தென்னிந்தியாவில் பயணிகள் அதிகம் பயன்படுத்தும் ரயில்நிலையங்களில் ஒன்றான சென்னை எழும்பூர் ரயில்நிலையத்தை ரூ. 20 கோடியில் சீரமைப்பு

தென்பகுதியின் நுழைவு வாயில்

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு ரயில்கள் இயக்கப்படுகிறது. தென் மாவட்டங்களுக்கு அதிக அளவில் ரயில்கள் இயக்கப்படுவதால், எழும்பூர் ரயில் நிலையம் ‘தென்பகுதியின் நுழைவு வாயில்’என அழைக்கப்படுகிறது.

தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்வதால், பயணிகளின் வசதிக்காக, ‘ரயில் நிலையங்கள் மேம்படுத்தும் திட்டத்தின்’ கீழ் எழும்பூர் ரயில் நிலையத்தை சீரமைக்க தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் முடிவு செய்திருந்தது. இதற்காக ரூ. 20 கோடி நிதியை ரயில்வே அமைச்சகம் ஒதுக்கியுள்ளது. தற்போது இந்த ரயில் நிலையத்தை சீரமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இதனால் தென்மாவட்டங்களுக்கு செல்லும் ஒரு சில ரயில்கள் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது. சீரமைப்பு பணியின் முக்கிய அம்சமாக, எழும்பூர் ரயில் நிலையத்தில் 5, 7, 8, 9-வது நடைமேடைகளில் கிரானைட் கற்கள் பதிக்கப்பட்டு வருகிறது. மேலும் பயணிகளின் வசதியை மேம்படுத்த, ‘பிரீபெய்டு’ குளிரூட்டும் காத்திருப்போர் அறை, உயர் வகுப்பு, 2-ம் வகுப்பு காத்திருப்போர் அறைகள், தாய்மார்கள் பாலூட்டும் அறைகள், உடை மாற்றும் அறைகள் நவீன வசதிகளுடன் சீரமைக்கப்பட்டுள்ளது.
ஓய்வு அறை – படுகை அறை வசதி

அந்த அறைகளில் மாற்றுத்திறனாளிகள் சுலபமாக பயன்படுத்தும் வகையில் கழிவறையும் மேம்படுத்தப்பட்டுள்ளது. எழும்பூர் ரயில் நிலையத்தின் முதல் மாடியில் இருக்கும் 14 படுக்கை வசதிகள் கொண்ட தங்கும் அறைகள் மற்றும் 16 ஓய்வு அறைகள் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. தற்போது 4-வது நடைமேடையில் செயல்பட்டு வந்த குளிர்சாதன வசதி கொண்ட காத்திருப்போர் அறை, ரயில் நிலையத்தின் முதல் மாடியில் அமைக்கப்பட்டு வருகிறது.

மேலும் 7, 8, 9 மற்றும் 10, 11-வது நடைமேடையில் தானியங்கி நகரும் படிக்கட்டுகள் புதிதாக அமைக்கப்பட்டு வருகிறது. காந்தி இர்வின் சாலையில் இருந்து எழும்பூர் மெட்ரோ ரயில் நிலையம் வரை, ரயில் நிலையத்தின் அனைத்து நடைமேடைகளையும் இணைக்கும் வகையில் அகல நடைமேம்பாலம் அமைக்கும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது.
நவீன ‘வாகன நிறுத்துமிடம்’ கட்டிடம்

எழும்பூர் ரயில் நிலையத்தின் வடக்கு பகுதியில் புதிதாக கார் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தும் வகையில் 2 அடுக்குமாடியில் நவீன ‘பார்க்கிங்’ கட்டிடம் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இது முன்பை விட கூடுதலாக, 100-க்கும் மேற்பட்ட கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ரயில் நிலையத்தில் பயணிகள் அமருவதற்காக கூடுதல் இருக்கைகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மின்சார ரயில் வழித்தடத்தில், ரயிலில் இருந்து இறங்கி வெளியேறும் போது கூட்ட நெரிசலில் மாட்டிக்கொண்டு அவதிப்படாமல் இருக்க, மறுபுறமும் நடைமேடை அமைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.

மார்ச் மாதம் பணி முடிவு

இந்த திட்டத்தின் மூலம் எழும்பூர் ரயில் நிலையத்துக்குள் பயணிகள், எந்த இடையூறும் இல்லாமல் வந்து செல்ல முடியும். பயணிகளை அழைப்பதற்கு அல்லது ரயில் நிலையத்தில் விட்டுச்செல்வதற்கு வரும் ஆட்டோ மற்றும் டாக்சி போன்ற வாகனங்களை நிறுத்துவதற்காக கூடுதல் ஏற்பாடு செய்யப்படும். இந்த பணிகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் முடிக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Updatenews360.com | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News