இலங்கைக்கு ரயில் இயக்கிய சென்னை ! ஒரு மாநகரின் ரயில் வரலாறு

சென்னை மாநகரின் வளர்ச்சிக்கு ரயில் போக்குவரத்து என்பது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஆங்கிலேயர்கள் காலத்தில் இருந்து அதாவது சுதந்திரத்துக்கு முன்பாகவே சென்னையில் ரயில் போக்குவரத்தை பிரதானமாக கொண்டு வணிகம் வளர்க்கப்பட்டது. அப்படிப்பட்ட வளர்ச்சியில் தென் இந்தியாவின் முதல் ரயில் நிலையமான ராயபுரம் ரயில் நிலையம் முதல் இப்போதுள்ள மெட்ரோ ரயில் திட்டங்கள் வரை ரயில் போக்குவரத்தில் அசுர வளர்ச்சியை பெற்றுள்ளது சென்னை மாநகரம்.
தென்னிந்தியாவின் முதல் ரயில் நிலையம்


கால வெள்ளத்தில் எவ்வளவு பெரிய விஷயங்களும் காணாமல் போய்விட வாய்ப்பு இருக்கிறது என்பதற்கான நிகழ்கால சாட்சியமாக நின்று கொண்டிருக்கிறது ராயபுரம் ரயில் நிலையம். இந்த ரயில் நிலையத்தின் கதை, மிக மிக சுவாரஸ்யமானது. இந்த ரயில் நிலையத்தில் இருந்துதான் தென்னிந்தியாவின் முதல் ரயில் தனது பயணத்தைத் தொடங்கியது. ஸ்டீபன்சன் நீராவி இஞ்ஜினை கண்டுபிடித்த 15 ஆண்டுகளுக்குப் பிறகு, தென்னிந்தியாவில் ரயில்களை இயக்குவது குறித்து லண்டனில் விவாதிக்கப்பட்டது. இதனையடுத்து 1845 ஆம் ஆண்டு மெட்ராஸ் ரயில்வே கம்பெனி தொடங்கப்பட்டது.ஆனால் வேலையைத் தொடங்குவதற்கு முன்னர், 1849 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தி கிரேட் இந்தியா பெனின்சுலா கம்பெனி இந்தியாவின் முதல் இருப்புப் பாதையை அமைத்துவிட்டது.
புறப்பட்டது முதல் ரயில்


42 கிலோ மீட்டர் அமைக்கப்பட்ட இந்த இருப்புப் பாதையில் மும்பையின் போரி பந்தரில் (Bori Bunder) இருந்துதான் இந்தியாவின் முதல் ரயில் 1853 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் தேதி இயக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தென்னிந்தியாவில் இருப்புப் பாதை அமைக்கும் பணியை மெட்ராஸ் ரயில்வே கம்பெனி தொடங்கியது. அதற்காக அது தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் தான் ராயபுரம். கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள் வசித்து வந்த புனித ஜார்ஜ் கோட்டைக்கு மிக அருகில் இருந்ததால், இந்த இடம் தேர்வு செய்யப்பட்டது. பணிகள் விறுவிறுப்பாக மேற்கொள்ளப்பட்டு, விசாலமான அறைகள், உயரமான தூண்கள், அழகான முகப்பு என பிரம்மாண்டமான ராயபுரம் ரயில் நிலையம் கட்டி முடிக்கப்பட்டது. அப்போதைய மெட்ராஸ் ஆளுநர் ஹாரிஸ் பிரபு 1856, ஜூன் 28 ஆம் தேதி இதனைத் திறந்து வைத்தார். இதனையடுத்து, ஜூலை 1 ஆம் தேதி தென்னிந்தியாவின் முதல் ரயில் இங்கிருந்து புறப்பட்டது.
ஆற்காடு வரை சென்ற ரயில் !


ஆற்காடு நவாப்பின் தலைமை இடமாக இருந்த ஆற்காடு வரை இந்த ரயில் இயக்கப்பட்டது. இதற்கான ரயில் பெட்டி களை அக்காலத்தில் புகழ்பெற்ற சிம்சன் கம்பெனி தயாரித்திருந்தது. ஆளுநர் ஹாரிஸூடன் சுமார் 300 ஐரோப்பியர்கள் இந்த முதல் ரயிலில் பயணப்பட்டனர். இந்த ரயில் புறப் பட்ட சிறிது நேரத்தில் மற்றொரு ரயில் ராயபுரத்தில் இருந்து திருவள்ளூர் வரை இயக்கப்பட்டது. ராயபுரம் ரயில் நிலையம், அடுத்த 17 ஆண்டுகளுக்கு சென்னை மாநகரின் ஒரே ரயில் நிலையமாக கோலோச்சியது.
வந்தது சென்ட்ரல் !


சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் ஹென்ரி இர்வின் என்ற ஆங்கிலேயரால் வடிவமைக்கப்பட்டது. 1873 ஆம் ஆண்டு சென்ட்ரல் ரயில் நிலையம் பயன்பாட்டுக்கு ஆங்கிலேயம் கொண்டு வந்தனர். பின்னர் வடக்கு நோக்கி செல்லும் ரயில்கள் சென்ட்ரலில் இருந்தும், தெற்கு நோக்கி செல்லும் ரயில்கள் ராயபுரத்தில் இருந்தும் புறப்பட்டுச் செல்லும் வகையில் பிரிக்கப்பட்டது. இதனிடையே சென்னை துறைமுகம் வேகமாக வளர்ச்சி அடைந்ததால், துறை முகத்தின் சரக்குப் போக்குவரத்தும் ராயபுரம் ரயில் நிலையம் மூலம் நடைபெறத் தொடங்கியது. இதன் விளைவு, புதிதாக முளைத்தது எழும்பூர் ரயில் நிலையம். பின்னர் தெற்கு நோக்கி செல்லும் ரயில்கள் எழும்பூருக்கு இடம்பெயர்ந்தன. சென்னை மாநகரின் அடையாளமாக இப்போதும் பல திரைப்படங்களில் காட்டப்படும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் பாரம்பரிக் கட்டடம், 150 ஆண்டுகள்தாண்டியும் கம்பீரமாக காட்சியளிக்கின்றனது.
எக்மோர் என்ற எழும்பூர் !


தென் தமிழகத்துக்கு படையெடுக்கும் மக்கள் செல்வது எழும்பூர் ரயில் நிலையத்தில்தான். இது ஒரு காலத்தில் ஆயுதக் கிடங்காக இருந்து என்றால் யாராலும் நம்ப முடியாது. இந்த ரயில் நிலையம் ஒரு கோட்டையாக இருந்து வந்துள்ளது. இதற்கு பெயர் எழும்பூர் ரெடோ.சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை போன்று எழும்பூரிலும் ஓர் பெரிய ரயில் நிலையம் கட்ட வேண்டும் என ரயில்வே நிர்வாகம் முடிவெடுத்ததைத் தொடர்ந்து, 1908ஆம் ஆண்டு இது கட்டப்பட்டது. முதலில் ராயபுரம் ரயில் நிலையத்தில் இயங்கி வந்த அப்போதைய மெட்ராஸ் மற்றும் தெற்கு மராத்தா ரயில்வேயின் தலைமையகம் பின்னர் இங்கு மாற்றப்பட்டு, 1951ஆம் ஆண்டு வரை இங்குதான் செயல்பட்டது. இந்திய, முகலாய மற்றும் கோதிக் கட்டிடக் கலைகளை ஒன்று கலந்து உருவாக்கப்பட்ட இந்தோ-சாராசனிக் பாணியில் இக்கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த வரலாற்று சிறப்புமிக்க கட்டிடத்தை கட்டியவர் சாமிநாதப் பிள்ளை என்ற தமிழ் கான்ட்ராக்டர். ராபர்ட் சிஸ்ஹோம் (Robert Chisholm) என்ற ஆங்கிலேயர் கட்டிடத்திற்கான வரைபடத்தை வடிவமைத்துக் கொடுத்தார். அப்போது எழும்பூர் ரயில் நிலையம் ரூ.17 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்டது.
கொழும்புவுக்கும் ரயில் உண்டு !


எழும்பூரில் இருந்து இலங்கையின் கொழும்பு நகருக்கும் ரயில்கள் இயக்கப்பட்டிருக்கின்றன. கொழும்பு செல்லும் பயணிகளை ஏற்றிச் செல்லும் எழும்பூர் - தனுஷ்கோடி போட் மெயில், அவர்களை தனுஷ்கோடியில் இறக்கிவிட்டுவிடும். பின்னர் அவர்கள் அங்கிருந்து படகு மூலம் இலங்கையின் தலைமன்னாருக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.சென்னை மாநகரத்திலிருந்து அதன் புறநகர் பகுதிகளுக்கு தொடருந்து சேவைக்கான தேவை, ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த காலக்கட்டத்திலேயே உணரப்பட்டு 1930-ஆம் ஆண்டு வாக்கில் செயல்படத்தொடங்கியது. அவ்வாறு செயல்பட்ட முதல் புறநகர் இருப்புவழி இணைப்பு, சென்னை மற்றும் தாம்பரத்தை இணைத்தது.


இப்போது சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர் மற்றும் சென்னை கடற்கரை மார்கமாக செங்கல்பட்டு வரை மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. மேலும் சென்னை எழும்பூரில் இருந்து தாம்பரம், செங்ல்பட்டுக்கும் மின்சார ரயில்கள் தினந்தோரும் இயக்கப்படுகிறது. நாள்தோறும் குறைந்தபட்சம் 5 லட்சம் பேர் புறநகர் ரயில் சேவைகளையும், பறக்கும் ரயில் சேவைகளும் பயன்படுத்துகின்றனர்.