ஜோலார்பேட்டையுடன் நிறுத்தப்பட்ட ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலை மீண்டும் திருப்பத்தூரிலிருந்து இயக்க பயணிகள் கோரிக்கை


Dinakaran Daily news
திருப்பத்தூர் சுற்றுப்பகுதிகளில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வசிக்கின்றனர். இவர்கள் பல்வேறு பணிகள் காரணமாக தலைநகரான சென்னைக்கு தினமும் சென்று வருகின்றனர். இதனால் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஜோலார்பேட்டையில் இருந்து அதிகாலை சென்னைக்கு சென்ற ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயில்சேவை கடந்த 2005ம் ஆண்டு திருப்பத்தூர் வரை நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து திருப்பத்தூர் பகுதி மக்கள் அதிகாலை 4.35 மணிக்கு ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சென்னைக்கு சென்றனர். இந்த ரயிலில் ரூ.72 கட்டணமாக வசூலிக்கப்பட்டது. இந்த ரயிலில் ஆயிரக்கணக்கான பயணிகள் பலன் பெற்றனர். இந்நிலையில் இந்த ரயில் கடந்த 2013ம் ஆண்டு முதல் திடீரென ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயில் புறப்பட்டு செல்கிறது. இதனால் இந்த ரயிலை பிடிக்க திருப்பத்தூர் பகுதி மக்கள் ஆட்டோக்கள், பைக், டவுன் பஸ்சை பிடித்து 9 கி.மீ தூரம் உள்ள ஜோலார்பேட்டைக்கு சென்று அங்கிருந்து ரயிலில் ெசன்னை செல்கின்றனர்.

அப்போது ரயில்வே பாலத்தில் ஏறி டிக்கெட் வாங்கி கீழே இறங்கி வருவதற்குள் பலர் ரயிலை தவற விட்டுவிடுகின்றனர். இதனால் அனைத்து தரப்பினரும் கடும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். மேலும் கால நேரயம், பண விரயமும் அதிகமாகிறது. எனவே, பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டும், தற்போது திருப்பத்தூர் மாவட்டமாக அறிவிக்கப்பட்டதால், ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலை மீண்டும் திருப்பத்தூர் வரை நீட்டித்து இயக்கவேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து ஒரு ரயில்வே உயரதிகாரி கூறியதாவது: சென்னையில் இருந்து ஜோலார்பேட்டை வரை சென்னை கோட்டத்து உட்பட்டது. ஜோலார்பேட்டையில் இருந்து திருப்பத்தூர் வரை சேலம் கோட்டத்துக்கு உட்பட்டது. சென்னை முதல் ஜோலார்பேட்டை வரை சென்னை கோட்ட ரயில் என்ஜின், ஜோலார்பேட்டை முதல் திருப்பத்தூர் வரை சேலம் கோட்ட ரயில் இன்ஜின் பொருத்த வேண்டியுள்ளது. மேலும் திருப்பத்தூரில் இருந்து ஜோலார்பேட்டை வரை அதிகாலையிலும், சென்னையிலிருந்து ஜோலார்பேட்டைக்கு இரவு 10 மணியளவில் வந்து சேரும் ரயிலை திருப்பத்தூர் வரை இயக்க சேலம் கோட்ட இன்ஜின் டிரைவர், கார்டு ஆகியோரை பணியில் அமர்த்த வேண்டியுள்ளது. நிர்வாக சிக்கல் காரணமாகவே இந்த ரயில் ஜோலார்பேட்டையுடன் நிறுத்தப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.