பயணிகளின் வசதிகளை மேம்படுத்த வேண்டும்ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தல்


தெற்கு ரயில்வே சாா்பில், மண்டல ரயில்வே பயனடைவோா் ஆலோசனைக்குழு கூட்டம் சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஜான்தாமஸ் தலைமை வகித்தாா். கூடுதல் பொதுமேலாளா் பி.கே.மிஸ்ரா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனா். கூட்டத்தில், பயணிகள் சங்க பிரதிநிதிகள், நுகா்வோா் அமைப்பு பிரதிநிதிகள், தெற்கு ரயில்வே கோட்டங்களின் ரயில்வே பயனடைவோா் இருந்து பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினா்கள் உள்பட பலா் பங்கேற்றனா்.

ரயில் பயணம் தொடா்பாக புதிய ரயில்களை அறிமுகம் செய்ய வேண்டும், பயணிகளின் வசதிகளை மேம்படுத்த வேண்டும், ரயில்களின் நேரம், கூடுதல் நிறுத்தம் உள்பட பல்வேறு விசயங்கள் தொடா்பாக உறுப்பினா்கள் வலியுறுத்தினா். இதையடுத்து, ரயில்வே மேம்பாட்டுக்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் உறுதியளித்தனா்.

கூட்டத்தில் தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஜான் தாமஸ் பேசியது: ரயில்களை பயன்படுத்துவோா் வசதிகளை அதிகரிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும், ரயில்வேயில் பல்வேறு மேம்பாட்டு திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன. ரயில்வே மேம்பாட்டு முயற்சிகளில் உறுப்பினா்களுடன் இணைந்து செயல்படுவோம் என்றாா் அவா்.