நாகர்கோவில் - திருநெல்வேலி மார்க்கத்தில் உள்ள காவல்கிணறு ரயில் நிலையத்தை 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் திறக்க தெற்கு ரயில்வே ஆணையிட்டுள்ளது என மாவட்ட ரயில்வே பயணிகள் சங்க தலைவர் மற்றும் ரயில்வே அலோசனை குழு உறுப்பினர் ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.

       இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது  கன்னியாகுமரிக்கு ரயில் வழித்தடம் 1979-ம் ஆண்டு ஏப்ரல் 15-ம் தேதி திருவனந்தபுரம் - கன்னியாகுமரி ரயில் பாதையும், 1981-ம் ஆண்டு ஏப்ரல் 8-ம் தேதி திருநெல்வேலி – நாகர்கோவில் ரயில்பாதையும் பயணிகள் பயன்பாட்டிற்காகவும் திறக்கப்பட்டது.  இவ்வாறு திறக்கப்படும் போது 87 கி.மீ தூரம் உள்ள கன்னியாகுமரி – திருவனந்தபுரம் ரயில்பாதையில் 16 ரயில் நிலையங்களும், நாகர்கோவில் - திருநெல்வேலி 74 கி.மீ மார்க்கத்தில் ஒன்பது ரயில் நிலையங்களும் அமைக்கப்பட்டன. இந்த ரயில் நிலையங்களில் ஆறு ரயில் நிலையங்களை வருமானம் குறைவாக வருகிறது என்று ரயில்வேத்துறை மூடிவிட்டது. கன்னியாகுமரியிலிருந்து நாகர்கோவிலுக்கு செல்லும் ரயில்பாதையில் அகஸ்தீஸ்வரம், தாமரைகுளம், சுசீந்தரம் என மூன்று ரயில் நிலையங்களும், நாகர்கோவில் - திருநெல்வேலி ரயில்மார்க்கத்தில் காவல்கிணறு, தளபதிசமுத்திரம், பானங்குளம் ஆகிய மூன்று ரயில் நிலையங்களையும் வருவாய் குறைவாக இருக்கின்றது என்றும் மற்றும் பல்வேறு காரணங்கள் காட்டி ரயில்வே நிர்வாகம் மூடிவிட்டது.

        நாகர்கோவிலிருந்து திருநெல்வேலி மார்க்கம் உள்ள ரயில்வே வழித்தடத்தில் ஆரல்வாய்மொழிக்கும் பணக்குடிக்கும் இடையே காவல்கிணற்றில் ரயில் நிலையம் இயங்கி வந்தது. காவல்கிணறு ரயில் நிலையத்திலிருந்து அடுத்து ஏழு கி.மீ தூரத்தில் ஆரல்வாய்மொழி ரயில் நிலையமும்  மறுமார்க்கம் நான்கு கி.மீ தூரத்தில் பணக்குடி ரயில் நிலையமும் உள்ளது. இந்த ரயில் நிலையம் மூலமாக ரயில்வேத்துறைக்கு போதிய வருமானம் இல்லை என்று கூறி 1994-ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி மூடப்பட்டது. இந்த ரயில் நிலையத்தை மூடி சுமார் 25 ஆண்டுகள் ஆகியுள்ளது.

              தற்போது காவல்கிணற்றை சார்ந்த சுற்றியுள்ள பகுதிகள் நன்கு முன்னேறியுள்ளது. இதனால் தற்போது இந்த பகுதியில் அதிக அளவு பயணிகள் பல்வேறு பணிகள் நிமித்தம் பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்கின்றனர். இந்த ரயில் நிலையத்தை மீண்டும் திறக்க வேண்டும் என்று இந்த பகுதிமக்கள் கடந்த பத்து  ஆண்டுகளாகவே கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த ரயில் நிலையத்தை திறந்தால் இந்த ரயில் நிலையத்தை சுற்றியுள்ள சுமார் 18 பஞ்சாயத்தை சார்ந்த மூன்ற லட்சம் மக்கள் பயன்படுத்தும் வாய்ப்பு உள்ளது. இது மட்டுமில்லாமல் இந்த பகுதியை சுற்றியுள்ள சுமார் 30 கல்லூரிகளை சார்ந்த மாணவ மணவிகள் இந்த பகுதியில் ரயில் நிலையம் இல்லாத காரணத்தால் ஆரல்வாய்மொழி  பணக்குடி அல்லது வள்ளியூர் ரயில் நிலையத்தை பயன்படுத்துகின்றனர். காவல்கிணறு அருகில் உள்ள விண்வெளி ஆராய்சி மையத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அவர்களின் அலுவலகத்துக்கு அருகில் ரயில் நிலையம் இல்லாத காரணத்தால் பேருந்துகளில் பயணிக்கும் நிலை உள்ளது. மூடப்பட்ட ரயில் நிலையத்தை மீண்டும் திறக்க ரயில் நிலைய மீட்புக்குழு ஒன்றை அமைத்து, கடந்த பத்து ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் பல முயற்சிகள் செய்து வந்தனர். ரயில்வே அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் இணைந்து நேரில் சந்தித்து மனுக்களை கொடுத்து   போராடி வந்தனர். இவர்களின் கடும் போராட்டத்தின் பலனான இந்த ரயில் நிலையத்தை திறக்க ரயில்வேதுறை முடிவு செய்துள்ளது. இதற்கு சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் பல்வேறு கட்டங்களில் கோரிக்கைக்கு நிறைவடைய உதவிபுரிந்துள்ளனர்.

ரயில் நிலையம் மீண்டும் திறப்பு

      தற்போது இந்த ரயில் நிலையத்தை 25 வருடங்களுக்கு 10—ம் தேதி முதல் மீண்டும் திறந்து ரயில்கள் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே  உத்தரவிட்டுள்ளது.  ரயில்வே இணையதளங்கள் ரயில்வே அலைபேசி செயலிகளில் இந்த ரயில் நிலையத்தின் ரயில்கள் வரும் விபரம் போன்றவற்றை தெரிந்து கொள்ள நிலையத்தின் கோடு (Code)  KVLK ஆகும். முதலில் இந்த தடங்களில் செல்லும் அனைத்து பயணிகள் ரயில்கள் (நான்கு பயணிகள் ரயில்கள்) இந்த ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
1. நாகர்கோவில் - கோயம்பத்தூh பயணிகள் ரயில்  - 7:30
2. திருநெல்வேலி - நாகர்கோவில் பயணிகள் ரயில் -  7:53
3. கன்னியாகுமரி - திருநெல்வேலி பயணிகள் ரயில் - 18:59
4. கோயம்பத்தூர் - நாகர்கோவில் பயணிகள் ரயில் - 19:23

திருவனந்தபுரத்துக்கு நேரடி ரயில் வசதி ?

          காவல்கினறு ரயில் நிலையத்திலிருந்து தற்போது நாகர்கோவிலுக்கும், கோவைக்கும் மட்டுமே ரயில்வசதி உள்ளது. இந்த பகுதி பயணிகள் கோவை ரயிலில் அதிக அளவில் பயணம் செய்ய வாய்ப்பு உள்ளது. ஆனால் நாகர்கோவிலுக்கு ரயிலில் வெறு குறைவாகவே பயணம் செய்யவார்கள். ஆனால் நாகர்கோவிலிருந்து திருவனந்தபுரம் மார்க்கம் இயக்கப்படும் ரயில்களில் ஒரு சில பயணிகள் ரயில்களை திருநெல்வேலி வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர். இது மட்டுமில்லாமல் திருநெல்வேலியிருந்து இயக்கப்படும் திருச்செந்தூர், செங்கோட்டை செல்லும் பயணிகள் ரயில்களை நாகர்கோவில் வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும். இவ்வாறு செய்தால் அதிக அளவில் பயணிகள் பயணம் செய்து ரயில்வேத்துறைக்கு வருவாய் கிடைக்கும். இந்த ரயில் நிலையமும் அதிக பயணிகள் பயணம் செய்யும் ரயில் நிலையமாக திகழும் என்பதே இந்த பகுதி பயணிகளின் கோரிக்கை ஆகும்.

புதிய ரயில் நிலையங்கள்:-

         திருவனந்தபுரம் கோட்டத்தில் உள்ள தமிழக பகுதிகளில் மூடப்பட்ட ரயில் நிலையங்களை உடனடியாக திறக்க வேண்டும். இது மட்டுமில்லாமல் கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக அதிக மக்கள் தொகை அடர்த்தி நிறைந்த மாவட்டம் ஆகும். ஆகவே மாவட்டத்தில் புதிதாக ரயில்நிலையங்களை ஏற்படுத்தினால் மட்டுமே தற்போது உள்ள போக்குவரத்து நெருக்கடி ஓரளவுக்கு தீரும். ஆகவே குமரி மாவட்டத்தில் நெடுங்காலமாக கோரிக்கை வைத்து வரும்  பார்வதிபுரம், தெங்கன்குழி, ஒழுகினசேரி ஆகிய இடங்களில் புதிய ரயில்நிலையங்களை அமைக்க ரயில்வே நிர்வாகம் முன்வர வேண்டும். இது மட்டுமில்லாமல் மூடப்பட்ட ரயில்நிலையங்கள் அனைத்தையும் பயணிகள் பயன்பாட்டிற்காக மீண்டும்  திறக்க வேண்டும்.

பாராட்டு

         காவல்கிணறு ரயில் நிலையத்தை மீண்டும் திறக்க உத்தரவு பிறப்பித்த ரயில்வே அதிகாரிகளை பாராட்டி ரயில் நிலைய மீட்பு குழுதலைவர் துறை முத்து தலைமையில் துணைதலைவர் டி.தங்கசுவாமி, செயலாளர் அருள்தாஸ், பொருளாளர் ராமராஜன், மாவட்ட ரயில் பயணிகள் சங்க தலைவர் ஸ்ரீராம் ஆகியோர்  ரயில்வே அதிகாரிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.


இந்த ரயில் நிலையத்தின் பழைய புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது.