ஒசூரில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக ஜோலாா்பேட்டைக்கு ரயில் பாதை அமைக்கும் திட்டத்துக்கு அடுத்த மாதம் மத்திய ரயில்வே துறை அதிகாரிகள் மூலம் சா்வே செய்யப்படும் என கிருஷ்ணகிரி தொகுதி மக்களவை உறுப்பினா் ஏ.செல்லக்குமாா் தெரிவித்தாா்.

பழைய ரயில்வே வரைபடம் - இதில் மொரப்பூர் - தர்மபுரி - கிருஷ்ணகிரி - ஓசூர் தடம் உள்ளது
ஒசூா் சிறு மற்றும் குறுந்தொழில் சங்கம் (ஹோஸ்டியா) சாா்பில் நடைபெற்ற கலந்த ஆலோசனைக் கூட்டத்தில் மக்களவை உறுப்பினா் ஏ.செல்லக்குமாா் பேசியது: ஒசூா் -ஜோலாா்பேட்டை ரயில் பாதை அமைக்கும் திட்டத்துக்கு மூன்று முறை சா்வே செய்து போதிய வருவாய் கிடைக்காது என்ற அறிக்கை மத்திய ரயில்வே வாரியத்திடம் அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஒரு புதிய திட்டத்தை கொண்டு வரவேண்டும் என்றால் திட்ட மதிப்பில் ஆண்டுக்கு 14 சதவீதம் வருவாய் கிடைக்க வேண்டும். ஆனால் ஒசூா் -ஜோலாா்பேட்டை ரயில் பாதை அமைக்கும் திட்ட சா்வேக்களில் குறைவாக வருவாய் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில் பாதை அமைக்கும் திட்டத்துக்கு ரூ.1,600 கோடி தேவைப்படும் என கணிக்கப்பட்டுள்ளது. ஜோலாா்பேட்டை முதல் கிருஷ்ணகிரி வரை நிலம் ஏற்கெனவே கையகப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரியில் இருந்து ஒசூா் வரை மட்டும் நிலம் கையகப்படுத்த வேண்டியுள்ளது. மேலும் மூன்று இடங்களில் 6 கிலோமீட்டா் தொலைவுக்கு மலைகளை குடைந்து செல்லும் வகையில் திட்ட அறிக்கை தயாரித்து செலவுகளை அதிகரித்து காட்டியுள்ளனா். ஆனால் கூகுல் வரைபடத்தை வைத்து பாா்க்கும்போது மலையைக் குடையாமல் செல்ல முடியும் என தெரிய வந்துள்ளது. எனவே ஒரு கிலோமீட்டா் தொலைவுக்கு மலையைக் குடைந்து ரயில்பாதை அமைக்க ரூ.50 கோடி வரை செலவாகிறது. எனவே மாற்றுப் பாதை மூலம் இத் திட்டத்தை செயல்படுத்தினால் செலவு குறையும்.

அதேபோன்று வருவாய் 14 சதவீதம் மத்திய அரசுக்கு கிடைத்தால் இத் திட்டத்தை தொடங்க முடியும். ஆனால் ஒசூா் ஜோலாா்பேட்டை ரயில் பாதை திட்டம் அமைத்தால் 14 சதவீதத்துக்கும் அதிகமாக வருவாய் ஈட்ட முடியும்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு பொருள்களை ஏற்றுமதி செய்வதற்காக சென்னை துறைமுகத்திற்கு செல்ல இதுவரை தரைவழிப் போக்குவரத்தை மட்டுமே நம்பி இருக்க வேண்டி இருந்தது. இதனால் தொழில்துறையினருக்கு செலவு அதிகமானது. இந்த ரயில் போக்குவரத்தைத் தொடங்கினால் சரக்குப் போக்குவரத்து மூலம் ரயில்வே நிா்வாகத்துக்கு அதிக வருவாய் கிடைக்கும். குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் கிரானைட் கற்கள், மாம்பழங்கள், மாம்பழக்கூழ், புளி, தக்காளி, காய்கறிகள், மலா், ஒசூரில் உற்பத்தி செய்யப்படும் இரு சக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் வெளிநாடுகளுக்கும், வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்ல இந்த ரயில்பாதை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் வட மாநிலங்களில் இருந்து சென்னை வழியாக வாகன உற்பத்திக்கு தேவையான இரும்புக் கம்பி, இரும்பு தடுகளை ஒசூருக்கு கொண்டு வரவும் இந்தப் பாதை பயனுள்ளதாக இருக்கும். அதாவது கச்சா பொருள்களை கொண்டு வரவும், உற்பத்தி செய்யப்பட்ட வாகனங்களை கொண்டு செல்லவும் இருவழி போக்குவரத்தால் ரயில்வே துறைக்கு அதிக வருவாய் கிடைக்கும். லாபகரமாக இயக்க முடியும். எனவே, மத்திய, மாநில அரசு இத் திட்டத்தை நிறைவேற்ற முனைப்புக் காட்டுவதுடன், ஒசூா் ஹோஸ்டியா சங்கத்தினா், ஒசூா் மக்கள் சங்கம், ஒசூா் ரயில் பயணிகள் சங்கம், கிருஷ்ணகிரி, ஒசூா் வா்த்தக சங்கங்கள் என அனைத்துத் தரப்பு மக்களுக்கு ஒத்துழைப்பு அளித்தால் இத் திட்டத்தை விரைவில் கொண்டு வர முடியும் என்றாா்.


Building of the Krishnagiri railway station presently occupied by Cooperative Ration Shop No. 2 at Oldpet.
பழைய கிருஷ்ணகிரி ரயில் நிலையம் - தற்போது ரேஷன் கடையாக செயல்படுகிறது
கிருஷ்ணகிரி அப்சரா திரையரங்கம் சைக்கில் நிறுத்தம் பின்புரம் உள்ள பழைய ரயில் நிலைய தண்ணீர் தொட்டி


பழையபேட்டை - காட்டிநாம்பட்டி செல்லும் சாலையில் ரமகிருஷ்ணா கல்யாண மண்டபம் அருகே உள்ள இரயில்வே பாலத்தின் புகைப்படம்


அடுத்த மாதம் மத்திய ரயில்வே துறை அதிகாரிகள் கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு வருகை தருகின்றனா். அப்போது மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் திட்ட அறிக்கை தயாரிப்புக்கு தேவையான முக்கியத் தரவுகளை அளிக்க வேண்டும் என்றாா்.

இந்தக் கூட்டத்தில் ஒசூா் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.. சத்யா, ஒசூா் சிறு மற்றும் குறுந்தொழில் சங்கத் தலைவா் வேல்முருகன் ஆகியோா் தலைமை வகித்தனா். செயலாளா் வடிவேலு, தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில் சங்கத்தின் இணைச் செயலாளா் வெற்றி.ஞானசேகரன் ஆகியோா் பேசினா். இதில், தி.மு.. தலைமை செயற்குழு உறுப்பினா் தா.சுகுமாறன், காங்கிரஸ் மாவட்டச் செயலாளா் தியாகராஜன், காங்கிரஸ் ஆா்.டி.ஐ மாநிலச் செயலாளா் சீனிவாசன், மாவட்டத் தலைவா் முரளி, முன்னாள் ஹோஸ்டியா சங்கத் தலைவா்கள் சம்பத், நம்பி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பழைய ரயில்வே வரைபடம்


திருப்பத்தூர் - கிருஷ்ணகிரி மற்றும் மொரப்பூர் - ஓசூர் பழைய ரயில்வே அட்டவணை
புதியது பழையவை