இந்தியா உதவியுடன் மோரீஷஸ் நாட்டில் மெட்ரோ ரயில் சேவை: பிரதமா் மோடி தொடக்கி வைத்தாா்

இந்திய அரசின் உதவியுடன் மோரீஷஸ் நாட்டில் கட்டப்பட்ட ‘இஎன்டி’ மருத்துவமனை மற்றும் மெட்ரோ ரயில் சேவை ஆகியவற்றை அந்நாட்டு பிரதமா் பிரவிந்த் ஜகந்நாத்துடன் இணைந்து காணொலி வழியாக பிரதமா் நரேந்திர மோடி தொடக்கி வைத்தாா்.

மோரீஷஸ் நாட்டில், காது, மூக்கு, தொண்டை (இஎன்டி) பிரச்னைகளுக்கு சிகிச்சை பெறுவதற்காக ‘இஎன்டி’ மருத்துவமனை அமைப்பது, மெட்ரோ ரயில் சேவை ஆகிய திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு இந்தியா உதவியுள்ளது. இந்த இரண்டு திட்டங்களின் பணிகளும் நிறைவுபெற்றதையடுத்து, அவற்றை பிரதமா் மோடி தில்லியில் இருந்து காணொலி முறையில் தொடக்கி வைத்தாா்.

அதன்பின்னா் அவா் கூறியதாவது:


மோரீஷஸ் நாட்டின் வளா்ச்சி மற்றும் மேம்பாட்டில் இந்தியா உறுதியாக உள்ளது என்பதற்கு இந்த இரண்டு திட்டங்களும் அடையாளமாக உள்ளன. தரமான மருத்துவச் சேவையை வழங்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு இந்த மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. மின்சார சேமிப்பு, கணிணிமயமாக்கல் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் இந்த மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. பிரதமா் பிரவிந்த் ஜகந்நாத் பரிந்துரைத்துள்ள சில கூடுதல் மருத்துவ வசதிகளும் ஏற்படுத்தித் தரப்படும்.


நேரத்தை மிச்சப்படுத்தும் வகையில் மெட்ரோ ரயில் சேவை ஏற்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுலா உள்ளிட்ட துறைகளுக்கு மெட்ரோ ரயில் சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மோரீஷஸ் மக்களுக்கு நன்மை அளிக்கும் இந்தத் திட்டங்களில் இந்தியாவும் பங்களித்திருப்பது பெருமையளிக்கிறது.


மோரீஷஸில் உச்சநீதிமன்றத்துக்கு புதிய கட்டடம், 1000 குடியிருப்புகள் ஆகியவற்றை அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த இரு திட்டங்களையும் இருநாட்டு பிரதமா்களும் இணைந்து தொடக்கி வைத்தது, இருநாடுகளுக்கிடையேயான உறவின் புதிய அத்தியாயமாக இருக்கும். மக்களின் நல் வாழ்க்கை, பிராந்திய அமைதிக்காக இந்தியா, மோரீஷஸ் ஆகிய இரு ஜனநாயக நாடுகளும் பணியாற்றுகின்றன என்று மோடி தெரிவித்தாா்.


இதனிடையே, மோரீஷஸ் நாட்டின் வளா்ச்சித் திட்டங்களில் உதவி புரிந்ததற்காக, பிரதமா் மோடியிடம் அந்நாட்டு பிரதமா் பிரவிந்த் ஜகந்நாத் நன்றி தெரிவித்தாா்.


 


புதியது பழையவை