ரயில் நிலையம் வாடகைக்கு...!இந்திய ரயில்வே துறை வருவாயை கூட்ட வேண்டும் என்பதற்காக பல்வேறு வழிகளை கண்டுபிடித்துள்ளது. ரயில்பெட்டிக்குள்ளே விளம்பரம் செய்ய அனுமதி தந்து வருவாய் ஈட்டி வந்த இந்திய ரயில்வேதுறை ரயில் பெட்டிகளின் வெளியே சில குறிப்பிட்ட இடங்களில் மட்டும் விளம்பரங்களை கட்டணத்தின் அடிப்படையில் அனுமதித்தது.

 இந்தியாவில் முதன் முறையாக கேரளத்தில் தேர்தல் சமயங்களில் ரயில் பெட்டிகளின் வெளிப்புறங்களை முழுமையாக இடதுசாரி கூட்டணி சிவப்பு வர்ணம் பூசி தேர்தல் விளம்பரங்கள் செய்தது. அதை பின்பற்றி ஹிந்தி படவுலகத்தினர் தங்கள் படங்களை மக்களிடையே பிரபலப்படுத்த ரயில் பெட்டிகளின் வெளிப்புறத்தில் முழுக்க திரைப்படம் குறித்து விளம்பரம் செய்ததுடன்.. ரயில் பெட்டியில் நடிகர், நடிகையர் பயணித்து பயணிகளிடையே பேசி "திரைப்படத்தைப் பாருங்கள்' என்று கேட்டுக் கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் "ஹவுஸ் ஃபுல் 4' என்ற ஹிந்திப் படத்தின் ரயில் பெட்டிகளின் விளம்பரங்கள் மும்பை நகர்புறத்தை ஆச்சரியப்பட வைத்தது .

 தனியார் ரயில்களை இந்திய ரயில்வே துறையின் தடங்களில் ஓட அனுமதித்திருக்கும் ரயில்வே, இந்த யுக்திகளை எல்லாம் விழுங்கி ஏப்பம் விடுகிற மாதிரி இந்தியாவில் முதல் முறையாக கொச்சி டெர்மினஸ் ரயில் நிலையத்தை விழாக்களுக்காக வாடகைக்கு விடத் தொடங்கியுள்ளனர்.

 அதற்காக பயன்பாட்டில் இல்லாத ரயில் நிலையத்தைப் புதுப்பித்துள்ளது ரயில்வே துறை. கொச்சி டெர்மினஸ் ரயில் நிலையத்திற்கு 76 வயதாகிறது. நான்கு மணி நேரத்திற்கு வாடகை ஐம்பதாயிரம் ரூபாய். விழா, வைபவம், நிகழ்ச்சி நடக்கும் போது ரயில் நிலையத்தில் சூழல் வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு சிவப்பு சட்டை அணிந்த போர்ட்டர்கள்.. டிக்கெட் பரிசோதகர்... சரக்கு சாமான்களை எடுத்துச் செல்லும் டிராலி, தேநீர் ஸ்டால்கள் போன்ற வசதிகள் செய்து தரப்படுமாம்.

 விழாவிற்கு வருபவர்கள் ரயில் பெட்டிகளில் அமர்ந்து நிகழ்ச்சியை ரசிக்க வேண்டும் என்று விரும்பினால் ரயில் பெட்டிகளும் வாடகைக்குக் கிடைக்குமாம்..! இது போன்று இன்னும் எத்தனை திட்டங்கள் ரயில்வே துறையிடம் உள்ளதோ..!

News Courtesy -