ரயில்வே துறைப் பணிகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஜான் தாமஸ், ‘கடந்த 27-ம் தேதி நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் டிராபிக்கிங் தொடர்பாக விரைவில் அறிக்கை தரும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய ரயில்களை தனியாரிடம் ஒப்படைக்க பரிசீலனை நடைபெற்று வருகிறது. அரியலூரில் ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்ட மேம்பாலத்தை விரைவில் திறக்கும் பணி நிறைவடையும்.

தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை மூன்றாவது ரயில் வழிப்பாதையை அமைக்கக்கூடிய பணிகள் நடைபெற்று வருகிறது. அடுத்த வருடம் மார்ச் மாதம் பணிகள் நிறைவடையும். அதேபோல மன்னார்குடி முதல் புதுக்கோட்டை வரை ரயில் பாதைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

அந்த பணிகள் நிறைவடைந்த பிறகு தஞ்சாவூர் மன்னார்குடி வரை ரயில் பாதை அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படும். அதனால் ஏற்கனவே தஞ்சாவூர் மன்னார்குடி வரை ரயில் பாதைகள் அமைப்பதற்கான ஆய்வுகள் நடத்தப்பட்டு நிறைவுற்றுள்ளது. நடப்பு 2019-20 நிதியாண்டில் ஆகஸ்ட் வரை, தெற்கு ரயில்வே ஒட்டுமொத்தமாக 8% வளர்ச்சியை அடைந்துள்ளது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது வருவாய் மற்றும் பயணிகள் வருவாயில் 10% அதிகரித்துள்ளது. ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை பகுதியில் நீர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக சிறப்பு ரயில் மூலம் 141 முறை தண்ணீர் அனுப்பப்பட்டுள்ளன’ என்று தெரிவித்தார்.