பழமை மாறாமல் புதிய பாம்பன் தூக்கு பாலம் விரைவில் அமைக்கப்படும்: ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் பொறியாளர்கள் ஆய்வு செய்தனர்

இராமேஸ்வரம் : பழமை மாறாமல் புதிய பாம்பன் தூக்கு பாலம் விரைவில் அமைக்கப்படும்: ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் பொறியாளர்கள் ஆய்வு செய்தனர் 


இந்தியாவின் எல்லைப்பகுதியான ராமேஸ்வரம் தீவை இந்தியாவுடன் இனைக்கும் பாம்பன் ரயில் பாலத்தில் புதிய ரயில் பாலம் அமைப்பது தொடர்பாக, ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் பொறியியல் குழு மற்றும் தனியார் கட்டுமான நிறுவனத்தின் ஊழியர்கள் ஆய்வு செய்தனர். 

சென்னையிலிருந்து இலங்கைக்கு ஒரே பாதை அமைப்பதற்காக கடலுக்குள் 1914 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்டது பாம்பன் ரயில் பாலம். இந்த ரயில்வே பாலம் 105 ஆண்டுகளை கடந்தும் இன்று வரை கம்பீரமாக கடலுக்குள் நிற்கிறது. 

கப்பல்கள் கடந்து செல்லும் போது தற்போது மனித சக்தியால் மட்டும்மே பாலத்தின் நடுப்பகுதி திறந்து மூடப்பட்டு வருகிறது. இவ்வளவு பழமையான இந்த தூக்குப் பாலத்தை, சரக்கு மற்றூம் ரோந்து கப்பல்கள் கடந்து செல்லும்போது, கைகளால் திறந்து மூட முடியாமல் ரயில்வே தொழிலாளர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் மத்திய ரயில்வே துறை பாம்பன் ரயில் பாலத்தின் நடு பகுதியில் அமைந்துள்ள தூக்குப் பாலத்தை மின் மோட்டார் மூலம் திறந்து மூட்டும்படியான புதிய தூக்குப்பாலம் அமைக்க மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தது. 

இதற்கு அனுமதி அளித்து மத்திய அரசு முதல் கட்டப் பணிகளுக்காக, ரயில்வே துறைக்கு ரூ.35 கோடி நிதி ஒதுக்கியுள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில் இன்று ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் பொறியியல் குழு மற்றும் புதிய ரயில் பாலத்தை கட்டும் தனியார் கட்டுமான நிறுவனத்தின் பொறியாளர்கள் குழு கடலில் சர்வே செய்து பழைய தூக்குப் பாலத்தின் உறுதித் தன்மை குறித்து தூக்குப் பாலத்தில் ஆய்வு மேற்கொண்டனர். 

மேலும் நாளை (19.10.2019) மதியம் மத்திய ரயில்வே துறையின் உயர் அதிகாரிகள் மற்றும் ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் நிதி பங்கீட்டு அதிகாரிகள் 40 பேர் கொண்ட குழு இணைந்து, பாம்பன் பாலத்தின் நடுவில் புதிதாக கட்டப்பட உள்ள பாலம் குறித்து முழுமையான ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர். 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதியதாக கட்டப்படவிருக்கும் தூக்குப் பாலத்துக்கான முன்வரைவும், காணொலியும் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது. 
Samayam Tamil Tamil News