நீலகிரி மலை ரயில் தின விழா:சுற்றுலா பயணிகளுக்கு வரவேற்பு

 நீலகிரி மலை ரயில் தின விழா:சுற்றுலா பயணிகளுக்கு வரவேற்புஊட்டி ரயில்வே நிலையத்தில் மலை ரயில் தின விழா கொண்டாடப்பட்டது.மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு, 1809ம் ஆண்டு முதல், மலை ரயில் இயக்கப்படுகிறது.

அதில், மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னுாருக்கு, நீராவி இன்ஜின் மூலமும், குன்னுாரில் இருந்து, ஊட்டிக்கு டீசல் இன்ஜின் மூலமும் மலை ரயில் இயக்கப்படுகிறது. நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள், மலை ரயிலில் பயணிப்பதை விரும்புகின்றனர்.

இதனால், சீசன் நாட்களில் சுற்றுலா பயணிகளின் தேவைக்கு ஏற்ப,கூடுதல் பெட்டிகளுடன் ரயில் இயக்கப்படுகிறது. பாரம்பரியமிக்க இந்த மலை ரயிலுக்கு 'யுனெஸ்கோ' அந்தஸ்து கிடைத்தது, மாவட்டத்திற்கு பெருமை சேர்ப்பதாக உள்ளது.

இந்நிலையில், ஊட்டி ரயில் நிலையத்தில், மலை ரயிலின், 111வது ஆண்டு நிறைவு விழா நடந்தது. ரயிலில் பயணித்த சுற்றுலா பயணிகளை வரவேற்ற ரயில்வே நிர்வாகம், கேக் வெட்டி சுற்றுலா பயணிகளுக்கு வழங்கப்பட்டது.மேலும், ரயில் நிலைய துாய்மை மற்றும் வளர்ச்சிக்காக சிறப்பாக பணியாற்றிய ரயில்வே அலுவலர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இதில், மலை ரத அறக்கட்டளை நிறுவனர் நடராஜன், உதவி சுற்றுலா கழக அலுவலர் துர்காதேவி மற்றும் ஸ்டேஷன் மாஸ்டர் ரமேஷ் உட்பட பலர் பங்கேற்றனர். மலைரத அறக்கட்டளை நிறுவனர் நடராஜ் கூறுகையில், ''கடந்த, 20 ஆண்டுகளாக மலைரயில் விழா நடத்தப்பட்டு வருகிறது. மலை ரயில், 1809ல் துவக்கபட்டு, இன்றுடன் (நேற்று) 111வது ஆண்டு நிறைவடைவதை ஒட்டி, இவ்விழா நடத்தப்படுகிறது.''சுற்றுலாப் பயணிகள் மத்தியில் மலை ரயிலின் சிறப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த நிகழ்ச்சியின் நோக்கமாகும்,'' என்றார்.